Wednesday, 25 September 2013

"மரணத்திற்கான துரிதப் பாதையா?"

September 24, 2013 at 2:19am

இரண்டு நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஓர் விஷயம் நீலகிரிக்கு கோவையிலிருந்து மூன்றாவது மலைப் பாதை அமைப்பதற்கான அளவைப் பணிகள் முடிவுற்றிருப்பதாக வந்திருக்கும் செய்திகள். இது நற்செய்தி தானே, இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது என்று சிலர் எண்ணக் கூடும். அழிவிற்கான மூன்றாவது பாதையை அமைக்க முயல்கிறார்களே என்பதே என் வருத்தம். இதன் பின்னணியில் சில முக்கிய விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காகவே இந்த பதிவு.

தமிழகத்தின் வடமேற்கு கோடியில் உள்ள நீலகிரி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான பகுதிகளில் ஒன்றாகும். புவிக்கோளத்தின் மிகப் பழமையான நிலப் பகுதிகளில் ஒன்று இப்பிரதேசம். உலகின் மிக அழகிய, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, அற்புதப் பிரதேசமான இம்மலைத்தொடர்  குஜராத்தின் தென் முனையிலிருந்து குமரி வரை 1600 கி.மீ தொலைவிற்கு நீண்டிருந்தாலும் 2000 மீட்டருக்கு மேல் உயரமான முகடுகளைக் கொண்ட பகுதிகள் இத்தொடரின் தெற்கு பகுதிகளான கேரள, தமிழக மாநில எல்லைகளிலேயே அதிகம் உள்ளன. உலகின் பல்லுயிர்த் தன்மை மிகுந்த (Bio-diversity Hot spots) எட்டு பிரதேசங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்று. மேலும் மராட்டியம், கர்னாடகம், கேரளம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு மழை வளம் அளிக்கும் கடவுளாகவும், நீர்த்தேக்கும் தொட்டியாகவும் விளங்குகிறது. இயற்கை வனப்பு மிகுந்த இம்மலைத் தொடரின் பெரும்பாலான பகுதிகள் உலக பாரம்பரிய தளங்களுள் (World Heritage Sites) ஒன்றாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தினால் (UNESCO) அறிவிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நில அமைவு, காடுகளின் தன்மை, காணப்படும் தாவரங்களின் வகைகள் போன்றவற்றை வைத்து வட மற்றும் தென் பகுதிகளாகப் பிரித்துக் கூறுவர். இத்தொடரின் வட மற்றும் தென் பகுதிகளுக்குள்ளான மாற்றங்கள் தென்படத் தொடங்குவது வட கேரளத்தின் வயநாடு பீடபூமியிலிருந்து. இதற்கு தெற்கேயுள்ள நீலகிரித் தொடர் மற்றும் ஆனைமலைத் தொடர்களில் தான் 60க்கும் மேற்பட்ட மலை முகடுகள் 2000 முதல் 2695 மீட்டர் வரை உயர்ந்தும் குளிர்ந்தும் நிற்கின்றன. இப்பிரதேசங்களில் உள்ள அடர் கானகங்கள் தாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே தோன்றி பரிணாமடைந்த (endemic species) பல்வேறு உயிரினங்களின் வகைகளுக்கு வீடாக விளங்குகின்றன. நிலவியலாளர்களும், உயிரியில் ஆய்வரும் இதற்கு பல்வேறு சான்றுகளை முன் வைக்கின்றனர். மனிதத் குடியேற்றமும், வளர்ச்சியும் நாகரிகமும் கூட பழங்காலம் தொட்டே நிலவி வருவதற்கு மானுடவியலாளர்கள் இப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களான தோடர்கள், முதுவர்கள், காடர்கள், புலையர்கள், பணியர்கள், படகர்கள், பெட்ட குறும்பர், கசவர் ஆகியோரைக் கொண்டு நடத்திய ஆய்வுகளின் துணைக் கொண்டு கூறுகின்றனர்.

இத்தகைய சூழலியில் சிறப்பு பெற்ற பகுதியாக விளங்கும் நீலகிரித் தொடர் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் 1986ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் “உயிர்கோள இருப்பிடமாக” (Biosphere Reserve) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) “மனிதனும் உயிர்க்கோளமும்” (Man and Biosphere - MAB) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. 5520 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் உயிர்க்கோளத்தில் ஒட்டு மொத்த முதுமலை – நாகரஹோலே – வயனாடு – பந்திப்பூர் வனத் தொகுப்புகளும், நிலாம்பூர் மலைச்சரிவு காடுகளும், மேல் நீலகிரி பீடபூமியும், அமைதிப் பள்ளத்தாக்கும், சிறுவாணி மலைகளும் அடக்கம். இவற்றில் 2537 சதுர கி.மீ தமிழக எல்லைக்குள்ளும், 1527 சதுர கி.மீ கர்னாடக எல்லைக்குளும், 1455 சதுர கி.மீ கேரள எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன. “உயிர்க்கோள இருப்பிடம்” என்ற கருதுகோளில் இயற்கையும், தனித்தனியே பிரிக்கபட்டு இயற்கை வளங்கள் பாதுகாக்கப் படுவதில்லை, மாறாக இயற்கை வளங்களை மனிதன் முற்றிலும் அழிக்காமல் அவற்றுடன் அவன் கொள்ளும் உறவு, அவற்றை பயன்படுத்தி வாழ்வாதாராமாக்கி, பொருளீட்டி, வாழ்க்கை நடத்துவதாகும். அதன் வாயிலாக இயற்கை வளங்களை அவனைக் கொண்டே மேம்படுத்தி பாதுகாத்தல் என்பது குறிக்கோள். நீலகிரி உயிர்க்கோள இருப்பிட எல்லைகளுக்குள் இருப்பவை,

  • சுமார் 3300 பூக்கும் தாவர வகைகள் உள்ளன. இதில் 132 வகைகள் உயிர்க்கோள இருப்பிடத்திற்கு சொந்தமானவை (endemic ). இவற்றோடு 175 வகையான ஆர்க்கிட் தாவர வகைகளும் உள்ளன. அவற்றில் எட்டு நீலகிரி உயிர்க்கோளத்திற்கு சொந்தமானவை.
  • சுமார் 100க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களும், 350 பறவை இனங்களும், 80 வகையான ஊர்வன இனங்களும், 39 மீன் இனங்களும், 31 இருவாழ்வி இனங்களும், 316 பட்டாம்பூச்சி வகைகளும் நிறைந்துள்ள பல்லுயிர் மண்டலமாக நீலகிரி விளங்குகிறது. இவற்றில் வங்கப் புலி, சிங்கவால் குரங்கு, நீலகிரி லங்கூர், வரையாடு போன்ற மிக அரிய விலங்குகளும், இருவாச்சி போன்ற அரிய பறவையினங்களும், ராஜ நாகம் போன்ற அரிய பாம்பினங்களும் அடக்கம்.
  • பதினோரு பழங்குடி மக்களினங்கள்.
  • 16 முக்கிய பறவை வாழிடங்கள்
  • 7 முக்கிய காட்டுயிரி சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் சேமகங்கள், 10க்கும் மேற்பட்ட காட்டுயிரி வலசைத் தடங்கள்.
  • 12 முக்கிய ஆறுகள் மற்றும் பெரிய ஓடைகள், 25 அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள்.
  • 9 வகையான நில மற்றும் வன அமைப்புகள். இவற்றுள் முக்கியமானவை சோலைக் காடுகள் மற்றும் அவற்றைச் சூழ்ந்த புல்வெளிகள்.

இப்படியொரு சுவர்க்க பூமி இன்று இருக்கும் நிலையையும், நாளையடையப் போகும் நிலையினையும் நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. இவ்வற்புத பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, கடத்தல், தோட்டப் பயிர்கள், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் காடுகளழிப்பு, மண்வள அழிப்பு, விலங்குகள் வேட்டை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தையடைந்து மலைத் தொடரின் நிலவமைப்பின் சமநிலையையும், சுற்றுசூழல் சமநிலையையும் குலைத்து அதீதமான தீய விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்து என்ற பெயரில் மேட்டுப்பளையத்திலிருந்து உதகை, முதுமலை, கூடலூர் வழியாக மைசூர்  செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67ம், வயனாட்டிலிருந்து பந்திப்பூர் வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 220ம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலியில் மாசுபாடுகளும், விபத்தென்ற விதத்தில் செய்யப்படும் வனவிலங்குக் கொலைகளும் ஏராளம். காடழிப்பைப் பொறுத்தமட்டிலும் இதற்கு மேல் அழிக்கவொன்றுமில்லை என்ற நிலையில் தான் நின்றுக் கொண்டிருக்கிறோம். வனவிலங்கு வேட்டை மற்றும் கடத்தல் ஆகியவற்றில் பந்திப்பூர் பகுதி இன்றும் கொடிகட்டி பறக்கிறது என்பது தினசரி செய்திகளை வாசிப்போருக்கு தெரிந்திருக்கும். நாட்டிலேயே இமயத்திற்கும், சுந்தரவனங்களுக்கும் தெற்கே அதிக புலிகள் எண்ணிக்கையுள்ள பகுதியாக நாகரஹோலே-வயனாடு-பந்திப்பூர்-முதுமலை தேசியப் பூங்காக்களின் தொகுப்பு விளங்குகிறது. காரணம் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை பெருமளவில் இருப்பதால். இன்று அங்கு புலிகள் நேரடியாக வேட்டையாடப்பட்டும், மறைமுகமாக தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைவு, உறைவிட அழிப்பு ஆகியவற்றின் காரணமாக கொல்லப்பட்டு வருகின்றன. பிரித்தானியர்கள் நமது வளங்களை சுரண்டி அழிந்ததில் பாதி, வேட்டைத் தடுப்பு, காடழிப்பு தடுப்பு சட்டங்கள் இல்லாத காலங்களில் நாமும், நமது சமஸ்தான அரசர்களும்(!!), தற்கால அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர் தம் மாமன் மச்சினர் சுதந்திரமாக அழித்தொழித்தது மீதி என்ற நிலைமையில் தற்போது எஞ்சியிருக்கும் மிச்ச சொச்ச இயற்கை செல்வங்களையும் நவீன வளர்ச்சியின் பெயரில் முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு எதைத் தின்னப் போகிறோம்? எதைக் குடிக்கப் போகிறோம்?


பின்வரும் புள்ளிவிவரங்களை படித்தால் தலைசுற்றல் வருவது நிச்சயம். முதலில் இருப்பது 1849ல் ஆக்டர்லோனி என்பவரால் அளிக்கப்பட்டிருக்கும் உயிர்ச்சூழலைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் பரப்பளவுகள். அடுத்து உள்ளது 1993 வாக்கில் அதே வகை நிலங்களின் பரப்பளவுகள்.


நில அமைப்புகள் - சோலைக் காடுகள்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 8,600
1993ல் - ஹெக்டேரில் 4,225
51% வீழ்ச்சி
நில அமைப்புகள் - புல்வெளிகள்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 29,875
1993ல் - ஹெக்டேரில்4,700
85% வீழ்ச்சி
நில அமைப்புகள் - விவசாய நிலம்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 10,875
1993ல் - ஹெக்டேரில் 12,400
12% உயர்வு
நில அமைப்புகள் - தேயிலைப் பயிர்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 0
1993ல் - ஹெக்டேரில் 11,475

நில அமைப்புகள் - தைல மரங்கள்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 0
1993ல் - ஹெக்டேரில் 5,150


இவற்றை உற்று நோக்கினால் தெரிய வரும் ஒரு மகத்தான உண்மை, விவசாய நிலங்களுக்காக பழங்குடியினரும், காடுகளின் அருகே வாழும் கிராமத்தினரும் காடுகளை அழிக்கிறார்களென அரசுகள் கூவி வருவது முதல் தரக் கட்டுக்கதை என்பது. அழிவை ஏற்படுத்தியது சர்வ-நிச்சயமாக அரசுகளும், பெரு முதலாளிகளும், கடத்தல் மன்னர்களும், அரசியல் புள்ளிகளும், பெரு அதிகாரிகளும், பொருளீட்டும் பேராசைக் கொண்ட நகரிய நாகரிகத்தை சேர்ந்தவர்களுமேயன்றி பழங்குடியினரல்ல, சிறு விவசாயிகள் அல்ல. மேற்கூறிய அனைவரும் தான் செய்யும் திருட்டுத் தனங்களுக்கும், ஏற்படுத்தும் அழிவுகளுக்கும் பிற்கால பழங்குடி சந்ததியினர் சாட்சியாக இருந்துவிடக் கூடாதே என்பதற்காகவே புலிகள் சரணாலயங்கள், காப்பகங்கள், வன விலங்குப் பாதுகாப்பு என ஏமாற்றி அவர்களை காடுகளிலிருந்தும், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல்லாயிர வருடக் கணக்காக இவர்களைக் காட்டிலும் அவர்கள் செம்மையாகவே அவர்களின் வனங்களை பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்களில் முக்கியமானது சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகளின் பரப்பளவுகளில் உள்ள மாபெரும் சரிவு. இந்த சோலைக்காடுகள் – புல்வெளிகள் உலகின் மிக அரிய, தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் உயர் முகடுகளின் (பெரும்பாலும் 1800 மீட்டர்களுக்கு மேல்) பிரத்யேகமாகக் காணப்படும் ஒரு சூழலமைப்பு ஆகும். உயர் மலை முகடுளில் புல்வெளிகளும், முகடுளுக்கு இடையேயான பள்ளத்தாக்குகளில் பசுமைமாறா ஈர காடுகளும் அமைந்திருக்கும். இவ்வகை சூழலமைப்புகள் பெரும்பாலும் வருடம் முழுவதும் ஈரத் தன்மையுடனே இருக்கும். மழை பொழிவிற்கு சோலைகளும், பெய்யும் மழையை மண்ணில் சேகரித்து ஆறுகள் ஊற்றெடுக்க புல்வெளிகளும், ஊற்றெடுக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுக்க, மழை பெய்யவும் சோலை-புல்வெளி சூழல் தொகுதிகள் உதவி புரிகின்றன. தென்னிந்தியாவின் எல்லா முக்கிய நதிமூலங்களைத் தேடிப் பார்ப்பாமேயானால், அவையனைத்தும் ஏதோவொரு சோலைக் காட்டில் தான் ஊற்றெடுக்கிறது என்பதை அறியலாம். ஆறுகளின் உயர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இச்சூழல் தொகுதிகளே விளங்குகின்றன. இங்கிருந்து பெருக்கெடுக்கும் ஆறுகள், நீரோடைகள் தான் அடுத்தக் கட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (சுமார் 1600 மீட்டர் உயரங்கள், அதற்குகீழ் உள்ள உயரங்கள்)  நீர்தேக்கங்களில் தேக்கப்பட்டு அணைகளின் மூலம் சிறிது சிறிதாக வெளியேற்றப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சோலை-புல்வெளி சூழல் தொகுதிகளின் அழிவே மழை பொழிவில் குறைவையும், ஆறுகளின் நீர்வரத்தை குறைவையும் ஏற்படுத்தி உள்ளது. “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” என்பான் கம்பன். சத்தியமான வார்த்தைகள்,  நீர்வளம் குறைவது நிச்சயம் நதியின் பிழையல்ல, நம் பிழையே. இருபது ஆண்டிற்கு முன்னரே இவ்வீழ்ச்சி, தற்போது இப்புள்ளிவிவரங்களில் மேலும் வீழ்ச்சிகள் உண்டாகியிருக்கும். நீருக்காக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்கள் குறைவு. நமக்கு பிறகான தலைமுறையினர் எதிர்கொள்ளப் போவது அதிகம். இதுவரை கண்டவை “நீலகிரி உயிர்க்கோள இருப்பிடம்” முழுவதற்கும் இவ்வழிப்புகள் பொதுவானவை.


நீலகிரி உயிர்க்கோள இருப்பிடத்தில் உள்ள தமிழகப் பகுதிகளில் தான் ஒப்பீட்டளவில் மிக மோசமான காடழிப்பு, மண்வள அழிப்பு ஆகியவை நடந்தேறியுள்ளன. கூடலூரைத் தாண்டி கேரள வயனாட்டிற்கோ, கர்னாடக நாகரஹோலேவுக்கோ சென்று வந்தவர்கள் கண்டிருக்கக் கூடும். சுற்றுலா, நகர்மயமாதல், மலைப் பகுதி மேம்பாடு என்ற பெயர்களில் அரசும், பொது மக்களும், முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு இவ்வழகிய நிலப் பகுதியை அலங்கோலப்படுத்தியாயிற்று. உதகையில் 6 மாதம் பணி நிமித்தமாக தங்க வேண்டியிருந்தப் போது ஒன்பதாவது மைல் என்ற இடத்திலுள்ள ஏரியில் மீன் பிடிக்க செல்லலாம் என்று நண்பர் ஒருவர் கூற, நான்கு பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். கேரளத்திலுள்ள அற்புதமான நீர்நிலைகளைப் போன்ற ஒன்றை எதிர்பார்த்துப் போன எனக்கு அதிர்ச்சி, உதகையின் ஒட்டு மொத்த கழிவில் பாதியை சுமக்கும் ஒரு சாக்கடையாக அந்த ஏரி இருந்தது. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், எங்களூரில் என் வீட்டிற்கு பின்னிருக்கும் ஏரி உட்பட எங்கும் அப்படியொரு அழுக்கான நீர்நிலையைக் கண்டதில்லை. இத்தனைக்கும் அந்த ஏரி உள்ளப் பகுதி “பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி” (Reserve Forest) ஆகும்.   ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழைகளின் போது நீலகிரியில் தமிழகப் பகுதிகளின் மலைப்பாதைகளிலும், உதகை, கோத்தகிரி போன்ற நகரங்களிலும் ஏற்படும் மண் சரிவுகள் மிகப் பிரசித்தி பெற்ற நிகழ்வு ஆயிற்றே. எத்தனை பேர் செத்தால் நமக்கென்ன, எவ்வளவு அழிவு ஏற்பட்டால் நமக்கென்ன? மண் அரிப்பு ஏற்பட்டால் என்ன? வெட்டு மரத்தை என்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும், ஒட்டு மொத்த மலையையும் சரித்து மேட்டுப்பாளையத்தையும் காரமடையையும் மேலும் உயரமாக்க.  இருக்கிற சாலை வசதிகளால் இப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் போதாதென்று, புதிதாக ஒரு வழியமைக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது உள்ள சாலைகளிலேயே அத்தியாவசிய போக்குவரத்தைத் தவிர்த்து மற்ற சுற்றுலா வாகனங்கள், தமிழகத்திலிருந்து கேரளா, கர்னாடகா செல்லும் சரக்கு வாகனங்களையுமே அளவுடனும், முறைப்படுத்தியும் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கி ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த மூன்றாவது பாதையை வேறு அமைக்க எத்தனிக்கின்றனர். “எல்லோருடைய வீடுகளிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத பாதையொன்று சுடுகாட்டை நோக்கி போடப் பட்டுள்ளது” என்று ஓர் அரேபிய பழமொழி இருப்பதாக எங்கேயோ படித்த நியாபகம். என்னைப் பொறுத்த மட்டிலும் சமவெளிப் பகுதிகளிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு வனங்களினூடே செல்லும் ஒவ்வொரு பாதையும் நம்மை குழுவாக அடக்கம் செய்யப் பயன்படப் போகும் சுடுகாட்டிற்கு செல்லும் துரித-வழி சாலைகளே. இப்போதே குடிநீரை சந்தைப் பொருளாக்கி சாதனைகள் படைத்தாயிற்று. மேலும் காடுகளின் அழிவு, அடுத்தத் தலைமுறையை எங்குக் கொண்டு சேர்க்குமோ தெரியவில்லை.
இவைப் போன்ற பகுதிகளுக்கு வணிகச் சுற்றுலா என்ற பெயரில் நண்பர்களுடன் பீர் பாட்டில் உடைத்து, வேசியை புணர்ந்து ஆணுறைகள் வீசி, பிளாஸ்டிக் பைகளை மண்ணில் புதைத்து சீரழிப்பதிற்கு துணைப் போவதற்கு பதிலாக கேரள சரணாலயங்கள், காப்பகங்களில் செய்வது போல் சூழலியல் சுற்றுலாத் (Eco-tourism) திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆதிவாசி சமூகத்தினருக்கும் சிறு, குறு வேலை வாய்ப்புகளை வழங்கலாம், அதே நேரத்தில் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்த முயற்சிக்கலாம். சோலைக் காடுகளும், புல்வெளிகளும் அழிவதால் நீராதாரம் மட்டுமே கெடுவதில்லை. நுண்ணுயிர் முதல், செடிகள், மரங்கள், கொடிகள், விலங்குகள், பூச்கிகள் என பல்லுயிர்க் கோவைகள் முற்றிலுமாக அழிந்து போகின்றன. பரிணாமத்தில் பல லட்சம் ஆண்டுகளாகப் படிப்படியாக முன்னேறி புவியில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் உயிரினத்தை ஓரிரு ஆண்டுகளில் முழுவதுமாக உலகில் இல்லாமல் அழித்தொழிப்பது எவ்வகையில் நியாயமாகும்? காடுகள் மற்றும் நீரின் அவசியம் குறித்த கட்டுரையொன்றில் நாஞ்சில நாடனின் வரியொன்று நினைவுக்கு வருகிறது, “விதைப்பைகளை அறுத்துப் பொரித்துத் தின்றுவிட்டு, இனவிருத்தி செய்ய இயலாது”. ஆம் நண்பர்களே! அழிப்பதற்காகவோ, கெடுப்பதற்காகவோ இல்லை காடும், மலையும் என்பதை இளைய தலைமுறையினருக்கு நாம் தான் கற்றுத் தர வேண்டும். எதிர்வரும் தலைமுறையினருக்கு தண்ணீர் வேண்டுமாயின் இப்போது இருப்பதைக் காட்டிலும் காடுகள் பெருகி, அவை பேணிக் காக்கப் படவும் வேண்டுமென்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது பெற்றோரின் கடமை.

--

ஞானசேகர் விஜயன்..

--

விவரங்கள் - www.nilgiribiospherereserve.com

2 comments:

  1. நீங்க பேசாம ஞானசேகரன் விஜயகாந்த் னு பேர மாத்துங்க பாஸ், புள்ளி விவரம் அருமை. ஆனால் உங்கள் கருத்துக்கள் மிகுந்த உண்மையை கூறுகின்றன. இதையெல்லாம் சொல்லி புரிய வைக்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க நம் மக்கள் (என்னையும் உங்களையும் சேர்த்து தான்) இருந்தாலும் உங்களை போன்ற ஒரு சிலரால் மட்டுமாவது இவற்றை பற்றி அக்கைறை கொள்வது பற்றி எனக்கு சந்தோசமே. UAE ல 25 வருசத்துக்கு முன்னாடியெல்லாம் அந்த அளவிற்கு மரங்கள் இல்லை அனால் இன்று இந்த நாட்டின் பலையை சோலையாக மாற்றிய நம்மவர்கள், சோலையாக இருந்த நம் தாய் நிலத்தை இன்று பாலையாக மாற்றி விட்டனர். உங்களை போன்ற ஆசிரியர்களால் மட்டுமே இனி இந்த தவறை சரி செய்ய முடியும். நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதின் நன்மையையும், அருமையையும் எடுத்துக் கூறுங்கள். நீங்களே நிறைய மரக் கன்றுகளை வாங்கி அவர்களை தெருவோரங்களில், அவர்களில் வீடுகளில் நட்டு வளர்க்க சொல்லுங்கள். உங்களின் அறிவுறுத்தல் இருந்தால் நிச்சயம் நம் இளைய சமுதாயம் மரங்களி வளர்பதற்கான முன்யர்சியை எடுக்கும். உங்களின் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.

    ReplyDelete