Wednesday, 25 September 2013

"மரணத்திற்கான துரிதப் பாதையா?" - சில வினாக்களும், விளக்கங்களும்


September 25, 2013 at 5:27pm


எனது முந்தையக் கட்டுரைக்கு பின்னூட்டமாக திரு.Mac Mohan என்பவர் அளித்திருப்பவையின் சுருக்கம் பின் வருமாறு:-

* தமிழ்நாட்டில் உள்ள புலிகள் சரணாலயங்களும், வன விலங்கு காப்பகங்களும், வன விலங்குப் பாதுகாப்பு என யாரையும் ஏமாற்றி இதுவரை வெளியேற்றவில்லை. யாரும் பழங்குடியினரை காட்டைவிட்டு வெளியேறாதே என்று வற்புறுத்தவும் சட்டமும் அனுமதிக்காது
* உங்களால் காப்பாற்ற முடியாததை பழங்குடியினர் எப்படி காப்பாற்றமுடியும்? பழங்குடியினரை விலைக்கு வாங்கி காடுகளை அழித்து விடுவர்.

* காடுகள் பொதுச்சொத்து. அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. அங்கு வாழும் காட்டுயிருக்கும் காடுகளில் வாழ உரிமை உள்ளது. இன்றய சூழலில் காடுகளின் அழிக்கும் திட்டங்களை எதிர்கொள்ள இன்று வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் நமக்கு தேவை. இவை இன்றுள்ள சட்ட ரீதியாக காடுகளுக்கு அதிக படியான பாதுகாப்பை உறுதி செய்கிறது. புதிய சாலைகளை அமைக்க இயலாது, சாலைவிரிவாக்கம் செய்ய இயலாது, சுரங்கம் அமைக்க முடியாது, என பல கட்டுப்பாடு விதிகள் உள்ளது. காடுகளில் சாலைகள் வேண்டாம் என கேட்கலாம், வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் வேண்டாம் என்றல்ல.

* வெளிச்சந்தையை சார்ந்து வாழும் பழங்குடியினருக்கு காடுகளை அழிக்காமல் வாழ்வாதாரம் பெருக வாய்ப்புகள் இல்லை. காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் பழங்குடியினர் தமிழ் நாட்டில் மிக மிக குறைவான என்னிக்கையில் உள்ளனர். உங்கள் நோக்கம் காடுகளை காப்பதா? அல்லது வாழ்வாதாரமா? கொஞ்சம் தெளிவு படுத்தவும்.

இதற்கான விளக்கங்களைஎன்னுடைய இந்த சிறிய கட்டுரையில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பழங்குடியினரைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டுதல், விலங்குகள் வேட்டை நடத்துவது உண்மையே. இதன் பின்னணியையும் நாம் உணர்தல் அவசியம்.

நாடு முழுவதும் உள்ள புலிகள் சேமகங்களையும், தேசியப் பூங்காக்களையும் மையக மண்டலங்களாகவும் (Core Zone), இடையக மண்டலங்களாகவும் (Buffer Zone) பிரித்து எல்லைகளை வரையறுத்தல் வழக்கம். இந்த Core Zone பகுதிகளுக்குள் எந்த விதமான மனித இடையூறுகளும் இருக்கக் கூடாதென்பது விதி. துரதிர்ஷ்டவசமாக பழங்குடியினக் குடியிருப்புகள் பெரும்பாலும் மையக மண்டலங்களிலும், அதனை ஒட்டியப் பகுதிகளிலும் தான் உள்ளன. இவர்கள் நீண்டக் காலமாக இந்தக் காடுகளின் வளங்களை வாழ்வாதாரமாக நம்பியே பிழைப்பு நடத்திக் கொண்டு வருகிறார்கள். மையக மண்டலங்கள், இடையக மண்டலங்கள் சரியாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் சூழல்-பாதுகாப்பு என்ற கருத்தின் அடிப்படையில் இவர்கள் இடையக மண்டலங்களுக்கோ, இல்லை அதற்கும் வெளியேவோ குடிப்பெயர நிர்பந்திக்கப் படுகின்றனர் அல்லது இருப்பிடங்களில் வாழ மட்டும் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு காடுகளுக்குள் சென்று காய், கனி, விறகு, தேன் போன்றவற்றை எடுக்க அனுமதி மறுக்கப்படுகின்றது. ப்ராஜெக்ட் டைகர் திட்ட்த்தின்படி பின்வருவது தான் விதிமுறை.

“The Tiger Reserves are constituted on a ‘core-buffer strategy’. The core area is kept free of biotic disturbances and forestry operations, where collection of minor forest produce, grazing, human disturbances are not allowed within. However, the buffer zone is managed as a ‘multiple use area’ with twin objectives of providing habitat supplement to the spill over population of wild animals from the core conservation unit, and to provide site specific eco-development inputs to surrounding villages for relieving the impact on the core. No relocation is visualized in the buffer area, and forestry operations, Non-Timber Forest Produce (NTFP) collection and other rights and concessions to the indigenous communities are permitted in a regulated manner to complement the initiatives in the core unit.”

Approach
  • Elimination of all forms of human exploitation and disturbance from the core and rationalization of such activities in the buffer.
  • Limitation of the habitat management to repair damage done by man.
  • Researching facts about habitat and wild animals and carefully monitoring changes in flora and fauna

மையக, இடையக மண்டலங்களின் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாத காப்பகங்களைக் கொண்டுள்ள சில மாநிலங்களும் உள்ளன. சிறிது காலத்திற்கு முன்பாக நீதி மன்ற தீர்ப்பொன்று புலிகள் காப்பகங்களில் சூழலியல் சுற்றுலா(Eco-Tourism) உட்பட எந்தவிதமான சுற்றுலா நடவடிக்கைகளும் இருத்தல் கூடாது என்று கூறியதும், தமிழகத்திலுள்ள அனைத்துப் புலிகள் சேமகங்களும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டன. ஆனால் கேரளத்தில் மிகச் சாதாரணமாக அப்போதும் சுற்றுலா நடவடிக்கைகள் நடந்துக் கொண்டுதான் இருந்தன. இங்கு நமது தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் வக்காலத்து வாங்கும் எவரும் இது ஏன் என்றெல்லாம் சிந்திப்பதில்லை. இதற்கான காரணம் மேற்கூறியது போல் மையக, இடையக மண்டலங்களின் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாத காப்பகங்களைக் கொண்டுள்ள சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. இம்மாதிரியான இடங்களில் ஒட்டு மொத்த சரணாலயமும் மையக மண்டலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்துவித சுற்றுலா நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.
எடுத்துக்காட்டாக ஆனைமலை புலிகள் சேமகத்தை (இந்திராகாந்தி தேசியப் பூங்கா) காண்போம். இந்த சரணாலயத்தின் மையகப் பகுதிகளாக சொல்லப்பட்டிருப்பவை கரியன்சோலை, க்ராஸ் ஹில்ஸ் மற்றும் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு ஆகிய மூன்று பகுதிகள் ஆகும். ஆனால் இவற்றின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படாமல் இருந்ததால், ஒட்டு மொத்தமாக 957 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முழு சரணாலயமும் மையகப் பகுதியாகக் கணக்கில் கொள்ளப்பட்டு டாப்ஸ்லிப் போன்ற வெளிப்புற இடங்களிலும், வால்பாறையை ஒட்டிய சின்னக் கல்லாறு, நல்லமுடிப் பூஞ்சோலை போன்ற தோட்ட நிலங்களை ஒட்டியப் பகுதிகளில் கூட சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற நேரங்களில் கடுமையான பாதிப்புகளுக்கு பழங்குடியினர் உள்ளாகின்றனர். இடையக மண்டலமும் மறுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் என்ன செய்து பிழைக்க முடியும். உண்மையாக பழங்குடியினர் நலன் மற்றும் வனப் பாதுகாப்பு தான் முக்கியம் என அரசுகள் நினைத்திருந்தால் தெளிவான எல்லைகளை உடனே வரையறுத்துக் கொடுத்திருக்க வேண்டும் அல்லது முற்றிலும் சுற்றுலாவை முடக்கியிருக்க வேண்டும். மாறாக எல்லைகளை பின்னர் வரையறுத்துக் கொள்ளலாம், இடைக்கால நடவடிக்கையாக 20 சதவீத மையகப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றொரு மிக மோசமான ஒரு உத்தியை உருவாக்கி,  இவர்களே இயற்றிய சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து மேல் முறையீடு செய்து நீதிமன்ற அனுமதியும் பெற்று விட்டனர். சுற்றுலா தளங்களை மையக மண்டலத்தின் 20 சதவீத பகுதிகளாக அறிவித்து, சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன. இனி ஒட்டு மொத்த சரணாலயமும் மையக மண்டலமாகக் கணக்கில் கொள்ளும் பட்சத்தில் பழங்குடியினரின் நிலை என்ன? அரசுகளுக்கு வருவாய் தரக் கூடிய சுற்றுலாத் துறை மூலம் வனங்கள் கெட்டால் பரவாயில்லை, ஆனால் இடத்திற்கு உரிமையான ஆதிவாசிகள் உள் நுழையக் கூடாது அவர்கள் வனங்களின் பயன்களைப் பெற்று வாழக் கூடாது. அது காட்டுயிரிகளுக்கு இடைஞ்சல். சுற்றுலா அனுமதி  சூழலுக்கும், காட்டுயிரிகளுக்கும் நன்மை பயக்கும். இது எவ்வகை நியாயம்? இன்னொரு முக்கிய விஷயம், சுற்றுலா தடை செய்யப் பட்டிருந்த காலத்தில் கூட முதுமலைபுலிகள் சேமகத்தின் வழியாக மைசூர் செல்லும் சாலையிலோ, ஆனைமலைகளில் அட்டகட்டி, வால்பாறை வழியாக சாலக்குடி செல்லும் சாலையோ. அமராவதி, சின்னாறு வழியாக மூணாறு செல்லும் சாலையிலோ போக்குவரத்து முடக்கப் படவில்லை. மையகப் பகுதிகளில் எந்தவொரு மனித இடையூறும் இருத்தல் கூடாது என்ற அடிப்படையில் அச்சாலைகளில் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் செய்யப்படவில்லை? வரி வருவாய் குறைந்துவிடும், வெட்டிய மரங்களை மலைகளில் இருந்து கீழிறக்க முடியாது என்பதால் தானே? சரணாலயங்கள், இன்று சட்ட ரீதியாக காடுகளுக்கு அதிக படியான பாதுகாப்பை உறுதி செய்கிறது. புதிய சாலைகளை அமைக்க இயலாது, சாலைவிரிவாக்கம் செய்ய இயலாது, சுரங்கம் அமைக்க முடியாது, என பல கட்டுப்பாடு விதிகள் உள்ளது என திரு.Mac Mohan அவர்கள் கூறுவதின் அபத்தத்தை விளங்கிக் கொள்ள இந்த எடுத்துக்காட்டு போதுமானது. இவர்களின் சட்டங்கள் எல்லாம் ரப்பர் விற்களை போல. எளிதில் வளைத்து நாணேற்றி விடுவார்கள்.


இவர்களின் வனப் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நலம் பேணுதல் ஆகியவற்றில் இவ்வளவு சிக்கல் உள்ள நிலையில், காடுகளுக்கு உள்ளிருந்தும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் படாமல், எந்தவித வேலைவாய்ப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல், இருத்தல் என்பதே கேள்விக்குறியாகி நிற்கும் சமயங்களில் அவர்கள் சொற்ப பணத்திற்காக கடத்தலுக்கு(Poaching) துணைப் போக நேர்கின்றது. வயிறென்பது அவர்களுக்கும் உண்டல்லவா? நகரிய நாகரிகத்தை சேர்ந்த மனிதர்களின் தொடர்புகள் அதிகமாகி பணத்தாசைப் பிடித்து சிலர் இக்காரியங்களில் ஈடுபடுவதும் மறுப்பதற்கில்லை. இம்மாதிரியான சூழலில் சத்தியமங்கலம் பகுதிகளில் இன்னொரு புலிகள் காப்பகத்தை ஏற்படுத்த அரசு முயன்ற போது, அதிக பழங்குடி கிராமங்கள் பரிந்துரைக்கப் பட்ட காப்பக எல்லை மற்றும் மையக மண்டலத்துக்குள் இருந்ததால், வெளியேற்றப் பட்டு விடுவோம் அல்லது வனத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என இயல்பாக ஆதிவாசி மக்களிடம் பயம் ஏற்பட்டு எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் Core Zone, Buffer Zone என்ற பேதங்கள் ஏதுமற்ற வனப் பிரிப்புக் கொள்கைக் கொண்ட அற்புத வனத்துறை.இப்பிரச்சினைகளை எல்லாம் கேரள வனத்துறை மிக அற்புதமாக கையாளுகிறது. வனத்துறை, அந்தந்த பகுதிகளின் பழங்குடியினர் நலக் கூட்டமைப்புகள் இணைந்து கடத்தல், வேட்டை போன்ற தொழிலை செய்து கொண்டிருந்த வனவாழ் மக்களையே துணையாய் கொண்டு, சரணாலயங்கள், காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் ஆகியவற்றின் இடையக மண்டலங்களில் மட்டும் சூழலியல் சுற்றுலாத் திட்டங்களை ஏற்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி வருகின்றனர். முதன்முதலில் தொடங்கப்பட்டது பெரியாறு புலிகள் காப்பகத்தில் தொண்ணூறுகளில். இன்று அந்த மாநிலம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சூழலியல் சுற்றுலாவின் வாயிலாக பல கோடி ரூபாய்களை வருடத்தில் ஈட்டப்படுகிறது. பயணிகள் கட்டணமாக செலுத்தும் பணத்தில் கணிசமான தொகை உடனடியாக அந்தந்த பகுதிகளின் ஆதிவாசி நலக் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டு, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் இவர்களின் விருந்தோம்பல், உதவி போன்றவற்றில் மகிழ்வடைபவர்களால் வழங்கப்படும் அன்பளிப்புத் தொகைகளும் பெறுகின்றனர். இதன் மூலம் வனத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்பவர்களுக்கு குறைந்தபட்ச மாத வருவாயை உறுதி செய்து, அவர்களால் காடுகளுக்கு ஏற்படும் இடையூறை குறைத்துள்ளனர். மேலும் அவர்கள் கடத்தல், வேட்டை போன்ற வனச் சட்டங்களுக்கு புறம்பாக ஈடுபடுவதையும் பெரும்பாலும் குறைத்துள்ளனர். சின்னாறு காட்டுயிரிக் காப்பகத்தில் பணிபுரியும் மலைப்புலையர் சமூகத்தை சேர்ந்த நண்பர் ஒருவர், தானும் தன் மனைவியும் சேர்ந்து  சீசன் காலங்களில் மாதம் 13-15 ஆயிரங்கள் பணம் ஈட்ட முடிகிறது என்று கூறிய போது உள்ளூர உவகை ஏற்பட்டது. கேரளத்திற்குள் உள்ள அனைத்து சரணாலயங்கள், காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் ஆகியவற்றின் மையக, இடையக மண்டலங்களின் எல்லைகள் ஏற்கனவே தெளிவாக வகுக்கப்பட்டுள்ளதால். நீதிமன்றத்தின் சுற்றுலா தடைத் தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து வந்த 20 சதவீத இடங்களில் தடை நீக்கம் போன்ற தீர்ப்பும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அன்றும், இன்றும், என்றும் மையகப் பகுதிகளில் அவர்கள் மனித நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருந்தனர், வைத்திருக்கின்றனர், வைத்திருப்பர். பரம்பிக்குளத்திலிருக்கும் காடர் இனத்தை சேர்ந்த பழங்குடித் தோழன் ஒருவன் உங்கள் மாநில அரசின், வனத் துறையின் மெத்தனப் போக்கின் காரணமாக மூன்று மாதமாக வருவாயிழந்துள்ளோம் என்று கூறியதைக் கேட்கும் போது அவமானமாகத் தான் இருந்தது. தமிழகத்தில் புலிகள் காப்பகங்களில் சுற்றுலா தடை செய்யப் பட்டிருந்த காலத்தில் பரம்பிக்குளத்தில் தடையேதுமில்லை. ஆனால் பரம்பிக்குளம் வனப் பகுதிக்கு செல்ல ஒரே சாலை தமிழக டாப்ஸ்லிப் வழியாகத் தான். சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரம்பிக்குளத்திற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதே இதற்கு காரணம்.


நம் நாட்டில் பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடுகள் இந்த லட்சணத்தில் இருக்கும் பட்சத்தில். அரசுகளைவிட பழங்குடியினர் காடுகளுக்கு குறைவான அழிவையே ஏற்படுத்திகின்றனர், அரசுகளை விட நன்றாகவே பேணிக் காக்கின்றனர் என்று கூறுவது தவறா என்ன? அதே நேரத்தில் சரணாலயங்களோ, காப்பகங்களோ, தேசியப் பூங்காக்களோ தேவையில்லை என்பதல்ல என் கருத்து. அவற்றின் விதிமுறைகள் தெளிவாக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவானதாய் மாற்றியமைக்கப்பட்டு, பழங்குடி மக்களின் நலனை கருத்தில் கொள்வதாக இருத்தல் வேண்டும். விதிமுறைகள் என்பது அரசுகளுக்கும், முதலாளிகளுக்கும் வளைந்துக் கொடுப்பதாகவும், வன வாசிகளுக்கு மட்டும் கடுமையானதாகவும், வாழ்வாதாரங்களை மறுத்து பசியில் வாட விடுவதாகவும் ஒரு போதும் இருக்கக் கூடாது.

பழங்குடியினர் மட்டுமே வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும் நான் எங்கும் குறிப்பிடவில்லை. அழிவுகளை ஏற்படுத்தி, சமவெளிகளில் இருந்த மக்களும், முதலாளிகளும் செய்த அழிவுகளுக்கு துணை நின்ற அரசுகள் பழங்குடியினர் மீது பழியை போடும் செயல் கடைந்தெடுத்த பொய்யென்று குறிப்பிட்டு இருந்தேன். மேலும் அதற்கான புள்ளி விவரங்களையும் அளித்திருந்தேன். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளில் நீலகிரியில் பெருகியிருக்கும் விவசாய நிலங்களின் பரப்பளவு வெறும் 2000 ஹெக்டேர். வனங்களை அழித்து உருவாக்கப்பட்டுள்ள தேயிலை தோட்டப் பயிர் நிலங்கள் சுமார் 12,000 ஹெக்டேர்.

கடைசியாக, தமிழகத்தில் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் பழங்குடியினர் தமிழ் நாட்டில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். மற்றவர்கள் வெளிச்சந்தையை சார்ந்து வாழ்கின்றனர் என்ற கூறியிருப்பது. கேரள எல்லை நெடுக்க நீலகிரியிலிருந்து குமரி மாவட்டம் வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள், வட மாவட்டங்களில் உள்ள ஜவ்வாது மலைகள், உள் மாவட்டங்களில் இருக்கும் சேர்வராயன் மற்றும் கொல்லி மலைகள் ஆகியப் பகுதிகளில் 20 வருடம் முன்பு வரை காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் பழங்குடியினர் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேலாகவே இருந்தனர். பெரும்பாலும் அரசுகளின் மோசமான திட்டம் தீட்டுதலும், செயல்படுத்துதலும், மேலும் அதிகார துஷ்பிரயோகங்களாலும், காடுகள் அழிக்கப்பட்டதாலேயுமே அவர்களெல்லாம் வெளிச்சந்தையை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விளைவு மோசமான தொடர்புகள், அவர்களுக்கு விலை போய் சட்ட விரோத கூலிகளாக மாறியது.

நோக்கம் காடுகளை காப்பாற்றுவதா? வாழ்வாதாரமா? என்றால், நிச்சயம் மேம்பாடு, வளர்ச்சியென்ற பெயர்களில் அரசு செய்யும் அழிவிலிருந்தம், அரசின் அமோக ஆதரவுப் பெற்ற பெருமுதலாளிகளிடமிருந்தும், அதிகார மட்டத்தில் ஆள் பிடித்து வைத்துக் கொண்டு கடத்தல் கைங்கரியங்களை நடத்துபவர்களிடமும் இருந்தும் காடுகளைக் காப்பதும், அக்காடுகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்பவர்களை வனப் பாதுகாப்பு, விலங்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அலைக்கழித்து வறுமையில் உழலவிடுவதையும் தடுக்க வேண்டும். அரசும், வனத்துறையும் விலங்குகள் மேல் கொண்ட பாசம் எப்படிப்பட்டது என்பதை திருவண்ணாமலை, விழுப்பரம் மாவட்டங்களில் ஊர்களுக்கும் நுழைந்து, வனத்துறைக்கு நெடு நாட்கள் போக்குக் காட்டி பிடிபட்ட ஆறு யானைகளை கும்கியாக்க துடிக்கும் விஷயத்தில் பார்க்கலாம். நீதிமன்றம் கும்கி யானைகளாக்க கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் மேல் முறையீடு செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் புரியவில்லையா? விலங்குக் காப்பகங்கள் மேல் இவர்கள் எவ்வளவு அக்கறைக் காட்டுவார்கள் என்று. 

No comments:

Post a Comment