Monday 7 October 2013

திராவிட், கங்குலி - மறைய மறுத்த நட்சத்திரங்கள்





ஜுன் 20, 1996 இங்கிலாந்தில் முன் கோடைகாலம், கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்பெறும் லார்ட்ஸ் மைதானம், இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப் பயணம். அன்றைய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் என்பது வெற்று சம்பிரதாயம். கடைசியாக துணைக்கண்டத்திற்கு வெளியே எப்பொழுது டெஸ்ட் போட்டியில் வென்றோம் என்ற நினைவுக் கூட இருந்திருக்காது அணியினருக்கும், நிர்வாகத்திற்கும். ஒன்றிரண்டு ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெறுவதோடு சரி. இளம் திறமையாளனாக, அதிரடி நாயகனாக வளைய வந்துக் கொண்டிருந்த சச்சின் தெண்டுல்கர், ஒரு ஆளுமையாக முதிரத் துவங்கியிருந்த பருவம். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் மரண அடியை வாங்கிக் கொண்டு தோற்பர். சில போட்டிகளில் தெண்டுல்கரோ, அசாருதீனோ கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல சில ஆறுதல் சதங்களை அடிப்பர். டிராவோ, போராடித் தோற்பதென்பதோ கூட மேற்கூறிய வெகு சில தருணங்களில் மட்டுமே நடக்கும். மற்ற இந்திய மட்டையாளர்களுக்கு பந்து காற்றில் ஸ்விங்க் ஆகக் கூடாது, ஆடுதளத்தில் விழந்த பிறகு சீம் ஆகக் கூடாது, இடுப்புக்கு மேலே உயர எழும்பக் கூடாது, மீறி இதிலொன்று நடந்துவிட்டால் கோபமுற்று(!!) அவுட் ஆகி விடுவார்கள். இங்கிலாந்தில் கோடை காலத்தின் முற்பகுதியில் நிலவும் குறைந்த வெப்பனிலை துணைக்கண்டத்திலிருந்து செல்லும் அணிகளால் பொறுத்தக் கொள்ள இயலாத அளவுக்கு, முதுகு நாணும், கை கால் விரல்களும் சில்லிட்டு விரைத்து கொள்ளும் அளவுக்கு இருக்கும். இந்த தட்ப வெப்பத்தில், போதாத குறைக்கு மித வேக பந்துவீச்சாளர்களின் பந்துகள் வேறு காற்றில் இருபது டிகிரியும், ஆடுதரையில் விழுந்த பிறகு நாற்பது டிகிரியும் இட வலமாகவும், வல இடமாகவும் மாறி மாறி நகரும்.  இது போதாதா தோற்பதற்கானக் காரணமாகக் கூற? இந்த சுற்றுப் பயணமும் ஜூன்20 வரை எந்த அரிய மாற்றத்தையும் கண்டுவிடவில்லை. 2-0 என்ற கணக்கில் ஒரு-நாள் தொடரை இழந்தாகிவிட்டது, பிர்மிங்கமில் ஆடிய முதல் டெஸ்ட்டையும் இழந்தாகி விட்டது. எவ்வளவு பெரிய தோல்விகளை சந்தித்தாலும் இந்திய அணியின் ஆடும் பதினொன்றில் மாற்றங்கள் சாதரணமாக கொண்டுவரப்படுவதில்லை என்பது இன்றுவரை தொடரும் வரலாற்று உண்மை. ஆனால் தொடர் தோல்விகளை சந்திக்கும் போது அணிகளுக்குள் சர்ச்சைகள் எழுவது வழக்கம். இந்த முறை சித்துவுக்கும் அசாருதீனுக்கும் ஏழாம் பொருத்தமாகிப் போனது. முட்டிக் கொண்டனர். சித்து பாதியிலே தாய்நாடு திரும்பிவிட்டார். சஞ்ஜெய் மஞ்சரேக்கருக்கு கணுக்காலில் காயம். இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே அன்று இரு இளம் வீர்ர்களுக்கு இரண்டாவது டெஸ்டில் வாய்ப்பளிக்கப்பட்டது. உண்மையில் அணி நிர்வாகம் அவர்களின் திறமையை உணர்ந்தெல்லாம் வாய்ப்பளிக்கவில்லை. முதல் இன்னிங்க்ஸில் 344 ஓட்டங்களுக்கு அனைத்து வீரர்களையும் இழந்தது இங்கிலாந்து. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 25/1, இந்தியாவை ஃபாலோ ஆன் ஆக்கக் கூட இந்த 344 போதும் என்று நினைத்திருப்பர். சவுரவ் சாந்திதாஸ் கங்குலி, ராகுல் சரத் திராவிட் என்ற இரு புதிய இளைஞர்கள் அன்று அதற்கு குறுக்கே நின்றனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டுகள் டிராவில் முடிந்தன. கங்குலி 131,136 என இரண்டு டெஸ்டுகளிலும் இரு சதங்களை அடித்தார். திராவிட்டின் பங்கு 95, 84. துணையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த சச்சினுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ள, மூன்றாவது டெஸ்டில் 177 ரன்களை குவித்தார். இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமுறை தலையெடுத்தது. அச்சமயத்தில் அதை எத்தனை பேர் உணர்ந்திருந்தனர் என்று தெரியவில்லை, இவ்விளைஞர்கள் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த அணித் தலைவராகவும், உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த மூன்றாம் எண் மட்டையாளர்களில் ஒருவராகவும் உருவாகத் தொடங்கிவிட்டனர் என்று.
 
காலம் மாற்றத்தைக் கொணர்ந்தது. மூன்று வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருவரும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு அணிப் போராடத் தொடங்கியிருந்தது. உபயம் வலுவான மட்டைவீச்சு வரிசை மற்றும் ஸ்ரீநாத். 1999 – 2000ல் ஒரு பெரும்புயல். முன் கூட்டியே ஆட்ட முடிவுகளை தீர்மானித்தல், சூதாட்டச் சர்ச்சை உலக கிரிக்கெட்டை உலுக்க, அசாருதீனுக்கு தடை விதிக்கப் பட, சச்சின் தலைமையில் தொடர் தோல்விகள், அவரின் மட்டை வீச்சிலும் கவனச் சிதறல். சச்சின் தலைமையை ஏற்க மறுக்க, 2000ஆம் ஆண்டு பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவின் இந்திய பயணத்தில் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு கங்குலி தலைமை வகித்தார். முதல் தொடரிலேயே 3-2 என வெற்றி. சூதாட்ட சர்ச்சை, வெளியிலிருந்து ஏகப்பட்ட விமர்சனங்கள் கடினமான காலகட்டம். அவ்வருடமே நடந்த ஐசிசி நாக்-அவுட் தொடருக்கு ஒரு மூவர் கூட்டணி அமைந்தது, டால்மியா – ஜான் ரைட் – கங்குலி. அணிக்கு இளரத்தம் பாய்ச்ச முடிவு செய்து யுவராஜ் சிங், ஜாகீர் கான் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றது அணி. சிறிது கால இடைவெளியிலேயே முகமது கைஃப், சேவாக், ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர், இர்ஃபான் பதான், சுரேஷ் ராய்னா போன்றோரையும் கங்குலி தான் அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் அதுவரை பெருநகர, மேட்டுக்குடி இளைஞர்கள் மட்டும் பெரும்பான்மையாக இருந்த தேசிய அணியில் சிறுநகர மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் திறமையின் அடிப்படையில் நுழைய வழிவகுத்தார். இளம் வீரர்களுக்கு கங்குலி போராளிக் குழுத் தலைவனைப் போல விளங்கினார். சாகசப் பயணம் தொடங்கியது. இதற்குள் திராவிட் மட்டை வீச்சு நுட்ப ரீதியாக சச்சினுக்கு அடுத்த நிலையில் அணியில் தான் இருக்கப் போவதை உறுதி செய்திருந்தார். 1997 தென்னாப்பிரிக்க பயணமும், 1999 நியூசிலாந்து பயணமும் இதற்கு சான்றுகள். அணியின் மட்டை வரிசை தெண்டுல்கர் திராவிட் மற்றும் கங்குலியை சுற்றி அமைந்தது. வீரேந்தர் சேவாக், விவிஎஸ் லக்ஷ்மண் சேர்ந்து கொள்ள, அசைக்க முடியாத மட்டைவீச்சு  கூட்டணி உருவாகியது. பந்து வீச்சு தாக்குதலுக்கு, இளம் வேக வீச்சாளர்களும், ஸ்ரீநாத்தும், கும்ப்ளேவும். கங்குலியும், ஜான் ரைட்டும் இணைந்து வெளிநாட்டு டெஸ்ட்டுகளில் வெற்றி பெறத் தேவையான அனைத்து அம்சங்களையும் உருவாக்கினர். ஐந்து வருடங்களில் அபாரமான முன்னேற்றம். துணைக்கண்ட ஆடுதளங்களில் 90 சதவிகத வெற்றி,  கணிசமான அளவில் வெளிநாட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் வெற்றிகள், உலகக் கோப்பை இறுதி வரை சென்றனர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை சமன் செய்தது என தொடர்ந்தது வெற்றிப் பயணம். அனைத்திலும் பெரும்பங்கு வகித்தார் ராகுல் திராவிட். டெஸ்ட் போட்டிகளில் அந்த காலகட்டத்தில் உலகின் மிகச் சிறந்த மட்டையாளரகவும், ஒரு நாள் போட்டிகளுக்கு இவரது ஆட்டமுறை சரிவராது என விமர்சித்தவர்களை தலைகுனிய செய்யும் விதத்திலும் ஆடி சாதித்து கொண்டிருந்தார். ஜோகன்ஸ்பர்கில் 148, ஹேமில்டனில் 190, கொல்கத்தாவில் 180, அடிலெய்டில் 233, ஹெடிங்க்லீயில் 148, ஓவலில் 217, ஜார்ஜ் டவுனில் 144, லாகூரில் 270 என உலகம் முழுவதையும் வென்றிருந்தார். 2004ல் சிட்டகாங்கில் அடித்த சதத்தின் மூலம் உலகின் அனைத்து டெஸ்ட் ஆடும் நாடுகளிலும் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்தார். அணிக்கு மற்ற நாடுகளைப் போல ஆல்ரவுண்டர்களோ, மட்டை வீச்சில் திறன் வாய்ந்த விக்கெட் கீப்பர்களோ கிடைக்காத போது, அணி நிர்வாகம் விக்கெட் கீப்பராக்க திராவிடை அணுகிய போது, மறுக்காமல் அதை ஏற்றார். அதன் மூலம் ஒரு பந்து வீச்சாளரையோ, மட்டை வீச்சாளரையோ அணியில் அதிகமாக சேர்க்க முடிந்தது. மட்டை வரிசையில் ஐந்தாம் வீரராக களம் கண்டு பல ஒரு நாள் போட்டிகளை வெல்ல உதவினார். கங்குலி ஒரு நாள் போட்டிகளில் சதங்களாக நொறுக்கிக் கொண்டிருந்தார். தெண்டுல்கரும் அவரும் சேர்ந்து உலகின் வெற்றிகரமான ஒரு-நாள் போட்டி துவக்க ஜோடியாக விளங்கினர்.



2003 உலகக்கோப்பை இறுதிக்கு சென்றது கங்குலியின் உச்சம் எனில், 2004ல் கங்குலியின் சரிவு துவங்கியது. ஜான் ரைட்டும் கங்குலியும் வைத்த மரம் பூத்து குலுங்கி, காய் காய்த்து பலனளித்துக் கொண்டிருந்த வேளை அது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டுக்கான ஆடுதளம் பயணம் வந்த அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது எனக் குறை கூறி கடைசி நேரத்தில் ஆடும் பதினொன்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். டால்மியாவின் பதவிக் காலம் முடிந்தது. ஜான் ரைட்டுடன் சிறிய கருத்து வேறுபாடு, தானே பரிந்துரை செய்து பயிற்சியாளராக்கிய கிரெக் சேப்பலுடன் பெரிய மோதல், கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு இழப்பு, மட்டை வீச்சில், ஓட்டக் குவிப்பில் வீழ்ச்சியென சுழற்றி அடிக்க தொடங்கியது. 2005 செப்டெம்பரில் கங்குலி அணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு திராவிட் நியமிக்கபட்டார். தொடர்ந்த சில மாதங்களில் பாகிஸ்தான் சுற்றுபயணம் முடிந்த பிறகு அணியிலிருந்தும் நீக்கபடுகிறார். கங்குலியும் ஜான்ரைட்டும் வைத்த மரங்கள் கனி கொடுக்க துவங்கியிருந்தன. திராவிட் தலைமையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை நீண்ட காலங்களுக்குப் பிறகு வென்றது. இதுவும் கங்குலி அணிக்கு திரும்புவார் என்று நம்பியவர்களின் நம்பிக்கைகளைக் குறைத்தது.

2006 திசம்பர், தென்னாப்பிரிக்காவில் இந்தியா உதை வாங்கும் என கணிக்கப்பட்டிருந்தது. கங்குலி அணிக்கு திரும்ப அழைக்கப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் ஆட உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உறுதியில்லாதவர் என கோரமாக புறக்கணிக்கப்பட்ட அதே கங்குலி. அவரின் மட்டைவீச்சு நுட்ப பலவீனங்களை எளிதாக பந்துவீச்சாளர்கள் சுரண்டி வெளியேற்றிவிடுவார்கள், பவுன்சர்களை சமாளிக்கத் தெரியாது என நிராகரிக்கப்பட்ட அதே கங்குலி. பந்துகள் வேகமாக எகிறி வரும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவர் பெற்ற ஓட்டங்கள் 51, 25, 0, 26, 66, 46 (இது இரு அணிகளாலும் குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட டெஸ்ட் தொடராகும்). அதைத் தொடர்ந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8, 48, 102, 46, 239, 91 என மொத்தம் 534 ஓட்டங்களை குவித்து சாதித்தார். பின்னர் ஆடிய முக்கியத் தொடர்களில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் 34, 40, 79, 1*, 37, 57,  ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அவர் பெற்ற எண்ணிக்கைகள் 43, 40, 67, 51, 9, 0, 7, 18, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் 24, 0, 87, 87, 13*, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் 47, 26*, 102, 27, 5, 32*, 85, 0. டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டப் பிறகு 10 அரை சதங்கள், ஒரு இரட்டை சதம் உட்பட 3 சதங்கள், 8 முறை நாற்பதுகளில் வெளியேறியது என பல முக்கிய சமயங்களில் வலுவான ரன்களை பெற்று அணிக்கு உறுதி சேர்த்தார். தனது ரசிகர்களால் “ஃபீனிக்ஸ்” என வருணிக்கப்படுவது பொய்யல்ல என்பதை நிருபித்த கங்குலி, ஆஸ்திரேலியத் தொடருடன் ஓய்வை அறிவித்தார். முன்னதாக 2007ல் பாகிஸ்தானுடனான தொடருடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டிருந்தார். இந்தியக் கிரிக்கெட் பெற்றெடுத்த மிகச் சிறந்த அணித் தலைவரின், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த டெஸ்ட் அணியை செதுக்கிய சிற்பிகளில் முக்கியமானவரின், சச்சினுக்கு அடுத்து இந்தியாவின் மிகச் சிறந்த ஒரு நாள் போட்டிகளின் மட்டையாளரின் கிரிக்கெட் வாழ்வு முற்றுபெற்றது. திராவிட்டின் வெற்றிகள் தொடர்ந்துக் கொண்டிருந்த நிலையில் தோனியின் தலைமையில் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் 4-0 என ஒயிட்-வாஷ் செய்யப்பட்டது. இங்கிலாந்துத் தொடரில் அட்டகாசமாக ஆடித் தனிமனிதனாக இங்கிலாந்தை சிறிதேனும் கலங்கடித்த திராவிட், ஆஸ்திரேலியத் தொடருடன் ஓய்வை அறிவித்தார். முன்னரே 2011 இங்கிலாந்துத் தொடருடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப் பெற்றிருந்தார். சொந்த மண்ணில் இங்கிலாந்தில் மறுபடியும் 2-1 என்ற கணக்கில் உதை வாங்கியது இந்தியா. பரவாயில்லை என்றார் தோனி, ஒரு நாள் போட்டிகளும், ஐபிஎல்லும் போதுமே டெஸ்ட்களே இல்லாமல் ஆக்கிவிட்டால் என்னவென்று எண்ணினார் சீனி. ஓம்  என்றுரைத்தன கிரிக்கெட் வாரியத்தின் விதிகள் , ஆம் ஆம் என்றுரைத்தனர் அவர்களது எடுபிடிகளும் முட்டாள் ரசிகர்களும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் இருண்ட காலமென்பது தொடங்கிவிட்டது அறியாமலோ, அல்லது அறிந்தும் 50 ஓவர், 20-ஓவர் போட்டிகளே ஆதர்சம் என அணித் தலைவரைப் போல் எண்ணியவர்களும்.

2013 ஐபிஎல் 20-20 காலக்கட்டம். இளைஞர்களுக்கான ஆட்ட வடிவம் இதுவென்று பல கிரிக்கெட் தெரிந்த/தெரியாத விமர்சகர்களும், ரசிகர்களும் பிதற்றி கொண்டிருந்த வேளையில் நடக்கிறது இது. கடந்த இரு தசாப்தங்களின் மிகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர், தனது வாழ்வின் முதல் ஆட்டத்தை ஆடும் முனைப்புடன் இளைஞனைப் போல களமிறங்குகிறார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வேளையில் இருந்த ஆர்வம், முனைப்பு, உடல் தகுதி (ஃபிட்னெஸ்), ரன் குவிக்கும் வேட்கை எதுவும் மறையவில்லை. ஆட்டம் துவங்குகிறது, முதல் பத்து நிமிடங்களுக்கு ஷாட்டுக்களை டைம் செய்ய முடியவில்லை. ரன் குவிப்பது கடினமாகத் தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஓட்டங்களை பெற முடிவு செய்து குறுகிய ஒற்றை ஓட்டங்களை போராடி பெறுகிறார். முன்பு போல பந்துகளின் அளவையும், உயரத்தையும் விரைவாக கணிக்க இயலவில்லை. கணித்தாலும் பந்துகளுக்கு வேகமாக எதிர்வினையாற்றும் திறனை உடலும், மூளையும் பெருமளவுக்கு இழந்துவிட்டது போல தோன்றுகிறது. தனது பழைய பிம்பங்களின் நிழலாக மட்டுமே தெரிகிறார். ஓய்ந்து விட்டார், போட்டி கிரிக்கெட் அற்ற ஒரு ஆண்டு ஆட்டத்திறனில் குறைவை ஏற்படுத்திவிட்டது என அனைவரும் முடிவுக்கு வருகிற சமயத்தில், காலத்தை பின்னோக்கி நகர வைக்கிறார் திராவிட். முதல் போட்டியிலேயே அரை சதம். ஆட்டத் தொடரில் வழக்கம் போல தொடர்ந்து அவசியமான நேரத்தில் முக்கிய ஓட்டங்களைக் கொடுக்கும் மட்டை வீச்சாளர்,  இளம் வீர்ர்களுக்கு பயிற்றுனர், மிகத் திறமையாக வழி நடத்தும் அணித் தலைவர், அணியின் நலனுக்காக மட்டை வரிசையில் தன் இடத்தை கீழிறக்கி இளம் அதிரடி வீர்ர்களுக்கு வாய்ப்பளிக்கும் அணி உணர்வு கொண்ட ஆட்டக்கார்ர், எதிரணி வியூகங்களை தகர்த்து மற்றும் அவர்களுக்கு எதிராக வியூகங்கள் வகுத்தல் மூலம் வெற்றிகளை குவித்தவர் என பல பரிமாணங்களில் இந்த தொடரில் மின்னினார். சூதாட்ட சர்ச்சைகளுக்கு இடையிலும் ராஜஸ்தான் அணியை அரையிறுதி வரை முன்னேற்றினார். தொடர்ந்து தற்போது அக்டோபரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீகிலும் இறுதிப் போட்டி வரை முன்னேற்றினார். தனது அணித் தலைவனைப் போல் போராடித் தான் இறுதிப் போட்டியில் தோற்றது ராஜஸ்தான் அணி. இத்தொடருடன் திராவிட் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து தன்னை விலக்கிக் கொள்கிறார்.


பொய்யாய் மாறிப் போயிருக்கும் இந்தியக் கிரிக்கெட்டில், நிஜ வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த ஒரு சகாப்தம் இத்துடன் முடிவு பெறுகிறது. இன்னும் ஒருவரே எஞ்சியிருக்கிறார் இந்தியாவில் மெய்யான கிரிக்கெட்டின் அஸ்தமனத்தை தற்காலிமாக தடுத்து நிறுத்தி கொண்டு, சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்.

Wednesday 25 September 2013

"மரணத்திற்கான துரிதப் பாதையா?" - சில வினாக்களும், விளக்கங்களும்


September 25, 2013 at 5:27pm


எனது முந்தையக் கட்டுரைக்கு பின்னூட்டமாக திரு.Mac Mohan என்பவர் அளித்திருப்பவையின் சுருக்கம் பின் வருமாறு:-

* தமிழ்நாட்டில் உள்ள புலிகள் சரணாலயங்களும், வன விலங்கு காப்பகங்களும், வன விலங்குப் பாதுகாப்பு என யாரையும் ஏமாற்றி இதுவரை வெளியேற்றவில்லை. யாரும் பழங்குடியினரை காட்டைவிட்டு வெளியேறாதே என்று வற்புறுத்தவும் சட்டமும் அனுமதிக்காது
* உங்களால் காப்பாற்ற முடியாததை பழங்குடியினர் எப்படி காப்பாற்றமுடியும்? பழங்குடியினரை விலைக்கு வாங்கி காடுகளை அழித்து விடுவர்.

* காடுகள் பொதுச்சொத்து. அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. அங்கு வாழும் காட்டுயிருக்கும் காடுகளில் வாழ உரிமை உள்ளது. இன்றய சூழலில் காடுகளின் அழிக்கும் திட்டங்களை எதிர்கொள்ள இன்று வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் நமக்கு தேவை. இவை இன்றுள்ள சட்ட ரீதியாக காடுகளுக்கு அதிக படியான பாதுகாப்பை உறுதி செய்கிறது. புதிய சாலைகளை அமைக்க இயலாது, சாலைவிரிவாக்கம் செய்ய இயலாது, சுரங்கம் அமைக்க முடியாது, என பல கட்டுப்பாடு விதிகள் உள்ளது. காடுகளில் சாலைகள் வேண்டாம் என கேட்கலாம், வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் வேண்டாம் என்றல்ல.

* வெளிச்சந்தையை சார்ந்து வாழும் பழங்குடியினருக்கு காடுகளை அழிக்காமல் வாழ்வாதாரம் பெருக வாய்ப்புகள் இல்லை. காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் பழங்குடியினர் தமிழ் நாட்டில் மிக மிக குறைவான என்னிக்கையில் உள்ளனர். உங்கள் நோக்கம் காடுகளை காப்பதா? அல்லது வாழ்வாதாரமா? கொஞ்சம் தெளிவு படுத்தவும்.

இதற்கான விளக்கங்களைஎன்னுடைய இந்த சிறிய கட்டுரையில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பழங்குடியினரைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டுதல், விலங்குகள் வேட்டை நடத்துவது உண்மையே. இதன் பின்னணியையும் நாம் உணர்தல் அவசியம்.

நாடு முழுவதும் உள்ள புலிகள் சேமகங்களையும், தேசியப் பூங்காக்களையும் மையக மண்டலங்களாகவும் (Core Zone), இடையக மண்டலங்களாகவும் (Buffer Zone) பிரித்து எல்லைகளை வரையறுத்தல் வழக்கம். இந்த Core Zone பகுதிகளுக்குள் எந்த விதமான மனித இடையூறுகளும் இருக்கக் கூடாதென்பது விதி. துரதிர்ஷ்டவசமாக பழங்குடியினக் குடியிருப்புகள் பெரும்பாலும் மையக மண்டலங்களிலும், அதனை ஒட்டியப் பகுதிகளிலும் தான் உள்ளன. இவர்கள் நீண்டக் காலமாக இந்தக் காடுகளின் வளங்களை வாழ்வாதாரமாக நம்பியே பிழைப்பு நடத்திக் கொண்டு வருகிறார்கள். மையக மண்டலங்கள், இடையக மண்டலங்கள் சரியாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் சூழல்-பாதுகாப்பு என்ற கருத்தின் அடிப்படையில் இவர்கள் இடையக மண்டலங்களுக்கோ, இல்லை அதற்கும் வெளியேவோ குடிப்பெயர நிர்பந்திக்கப் படுகின்றனர் அல்லது இருப்பிடங்களில் வாழ மட்டும் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு காடுகளுக்குள் சென்று காய், கனி, விறகு, தேன் போன்றவற்றை எடுக்க அனுமதி மறுக்கப்படுகின்றது. ப்ராஜெக்ட் டைகர் திட்ட்த்தின்படி பின்வருவது தான் விதிமுறை.

“The Tiger Reserves are constituted on a ‘core-buffer strategy’. The core area is kept free of biotic disturbances and forestry operations, where collection of minor forest produce, grazing, human disturbances are not allowed within. However, the buffer zone is managed as a ‘multiple use area’ with twin objectives of providing habitat supplement to the spill over population of wild animals from the core conservation unit, and to provide site specific eco-development inputs to surrounding villages for relieving the impact on the core. No relocation is visualized in the buffer area, and forestry operations, Non-Timber Forest Produce (NTFP) collection and other rights and concessions to the indigenous communities are permitted in a regulated manner to complement the initiatives in the core unit.”

Approach
  • Elimination of all forms of human exploitation and disturbance from the core and rationalization of such activities in the buffer.
  • Limitation of the habitat management to repair damage done by man.
  • Researching facts about habitat and wild animals and carefully monitoring changes in flora and fauna

மையக, இடையக மண்டலங்களின் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாத காப்பகங்களைக் கொண்டுள்ள சில மாநிலங்களும் உள்ளன. சிறிது காலத்திற்கு முன்பாக நீதி மன்ற தீர்ப்பொன்று புலிகள் காப்பகங்களில் சூழலியல் சுற்றுலா(Eco-Tourism) உட்பட எந்தவிதமான சுற்றுலா நடவடிக்கைகளும் இருத்தல் கூடாது என்று கூறியதும், தமிழகத்திலுள்ள அனைத்துப் புலிகள் சேமகங்களும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டன. ஆனால் கேரளத்தில் மிகச் சாதாரணமாக அப்போதும் சுற்றுலா நடவடிக்கைகள் நடந்துக் கொண்டுதான் இருந்தன. இங்கு நமது தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் வக்காலத்து வாங்கும் எவரும் இது ஏன் என்றெல்லாம் சிந்திப்பதில்லை. இதற்கான காரணம் மேற்கூறியது போல் மையக, இடையக மண்டலங்களின் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாத காப்பகங்களைக் கொண்டுள்ள சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. இம்மாதிரியான இடங்களில் ஒட்டு மொத்த சரணாலயமும் மையக மண்டலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்துவித சுற்றுலா நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.




எடுத்துக்காட்டாக ஆனைமலை புலிகள் சேமகத்தை (இந்திராகாந்தி தேசியப் பூங்கா) காண்போம். இந்த சரணாலயத்தின் மையகப் பகுதிகளாக சொல்லப்பட்டிருப்பவை கரியன்சோலை, க்ராஸ் ஹில்ஸ் மற்றும் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு ஆகிய மூன்று பகுதிகள் ஆகும். ஆனால் இவற்றின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படாமல் இருந்ததால், ஒட்டு மொத்தமாக 957 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முழு சரணாலயமும் மையகப் பகுதியாகக் கணக்கில் கொள்ளப்பட்டு டாப்ஸ்லிப் போன்ற வெளிப்புற இடங்களிலும், வால்பாறையை ஒட்டிய சின்னக் கல்லாறு, நல்லமுடிப் பூஞ்சோலை போன்ற தோட்ட நிலங்களை ஒட்டியப் பகுதிகளில் கூட சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற நேரங்களில் கடுமையான பாதிப்புகளுக்கு பழங்குடியினர் உள்ளாகின்றனர். இடையக மண்டலமும் மறுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் என்ன செய்து பிழைக்க முடியும். உண்மையாக பழங்குடியினர் நலன் மற்றும் வனப் பாதுகாப்பு தான் முக்கியம் என அரசுகள் நினைத்திருந்தால் தெளிவான எல்லைகளை உடனே வரையறுத்துக் கொடுத்திருக்க வேண்டும் அல்லது முற்றிலும் சுற்றுலாவை முடக்கியிருக்க வேண்டும். மாறாக எல்லைகளை பின்னர் வரையறுத்துக் கொள்ளலாம், இடைக்கால நடவடிக்கையாக 20 சதவீத மையகப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றொரு மிக மோசமான ஒரு உத்தியை உருவாக்கி,  இவர்களே இயற்றிய சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து மேல் முறையீடு செய்து நீதிமன்ற அனுமதியும் பெற்று விட்டனர். சுற்றுலா தளங்களை மையக மண்டலத்தின் 20 சதவீத பகுதிகளாக அறிவித்து, சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன. இனி ஒட்டு மொத்த சரணாலயமும் மையக மண்டலமாகக் கணக்கில் கொள்ளும் பட்சத்தில் பழங்குடியினரின் நிலை என்ன? அரசுகளுக்கு வருவாய் தரக் கூடிய சுற்றுலாத் துறை மூலம் வனங்கள் கெட்டால் பரவாயில்லை, ஆனால் இடத்திற்கு உரிமையான ஆதிவாசிகள் உள் நுழையக் கூடாது அவர்கள் வனங்களின் பயன்களைப் பெற்று வாழக் கூடாது. அது காட்டுயிரிகளுக்கு இடைஞ்சல். சுற்றுலா அனுமதி  சூழலுக்கும், காட்டுயிரிகளுக்கும் நன்மை பயக்கும். இது எவ்வகை நியாயம்? இன்னொரு முக்கிய விஷயம், சுற்றுலா தடை செய்யப் பட்டிருந்த காலத்தில் கூட முதுமலைபுலிகள் சேமகத்தின் வழியாக மைசூர் செல்லும் சாலையிலோ, ஆனைமலைகளில் அட்டகட்டி, வால்பாறை வழியாக சாலக்குடி செல்லும் சாலையோ. அமராவதி, சின்னாறு வழியாக மூணாறு செல்லும் சாலையிலோ போக்குவரத்து முடக்கப் படவில்லை. மையகப் பகுதிகளில் எந்தவொரு மனித இடையூறும் இருத்தல் கூடாது என்ற அடிப்படையில் அச்சாலைகளில் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் செய்யப்படவில்லை? வரி வருவாய் குறைந்துவிடும், வெட்டிய மரங்களை மலைகளில் இருந்து கீழிறக்க முடியாது என்பதால் தானே? சரணாலயங்கள், இன்று சட்ட ரீதியாக காடுகளுக்கு அதிக படியான பாதுகாப்பை உறுதி செய்கிறது. புதிய சாலைகளை அமைக்க இயலாது, சாலைவிரிவாக்கம் செய்ய இயலாது, சுரங்கம் அமைக்க முடியாது, என பல கட்டுப்பாடு விதிகள் உள்ளது என திரு.Mac Mohan அவர்கள் கூறுவதின் அபத்தத்தை விளங்கிக் கொள்ள இந்த எடுத்துக்காட்டு போதுமானது. இவர்களின் சட்டங்கள் எல்லாம் ரப்பர் விற்களை போல. எளிதில் வளைத்து நாணேற்றி விடுவார்கள்.


இவர்களின் வனப் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நலம் பேணுதல் ஆகியவற்றில் இவ்வளவு சிக்கல் உள்ள நிலையில், காடுகளுக்கு உள்ளிருந்தும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் படாமல், எந்தவித வேலைவாய்ப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல், இருத்தல் என்பதே கேள்விக்குறியாகி நிற்கும் சமயங்களில் அவர்கள் சொற்ப பணத்திற்காக கடத்தலுக்கு(Poaching) துணைப் போக நேர்கின்றது. வயிறென்பது அவர்களுக்கும் உண்டல்லவா? நகரிய நாகரிகத்தை சேர்ந்த மனிதர்களின் தொடர்புகள் அதிகமாகி பணத்தாசைப் பிடித்து சிலர் இக்காரியங்களில் ஈடுபடுவதும் மறுப்பதற்கில்லை. இம்மாதிரியான சூழலில் சத்தியமங்கலம் பகுதிகளில் இன்னொரு புலிகள் காப்பகத்தை ஏற்படுத்த அரசு முயன்ற போது, அதிக பழங்குடி கிராமங்கள் பரிந்துரைக்கப் பட்ட காப்பக எல்லை மற்றும் மையக மண்டலத்துக்குள் இருந்ததால், வெளியேற்றப் பட்டு விடுவோம் அல்லது வனத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என இயல்பாக ஆதிவாசி மக்களிடம் பயம் ஏற்பட்டு எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் Core Zone, Buffer Zone என்ற பேதங்கள் ஏதுமற்ற வனப் பிரிப்புக் கொள்கைக் கொண்ட அற்புத வனத்துறை.



இப்பிரச்சினைகளை எல்லாம் கேரள வனத்துறை மிக அற்புதமாக கையாளுகிறது. வனத்துறை, அந்தந்த பகுதிகளின் பழங்குடியினர் நலக் கூட்டமைப்புகள் இணைந்து கடத்தல், வேட்டை போன்ற தொழிலை செய்து கொண்டிருந்த வனவாழ் மக்களையே துணையாய் கொண்டு, சரணாலயங்கள், காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் ஆகியவற்றின் இடையக மண்டலங்களில் மட்டும் சூழலியல் சுற்றுலாத் திட்டங்களை ஏற்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி வருகின்றனர். முதன்முதலில் தொடங்கப்பட்டது பெரியாறு புலிகள் காப்பகத்தில் தொண்ணூறுகளில். இன்று அந்த மாநிலம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சூழலியல் சுற்றுலாவின் வாயிலாக பல கோடி ரூபாய்களை வருடத்தில் ஈட்டப்படுகிறது. பயணிகள் கட்டணமாக செலுத்தும் பணத்தில் கணிசமான தொகை உடனடியாக அந்தந்த பகுதிகளின் ஆதிவாசி நலக் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டு, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் இவர்களின் விருந்தோம்பல், உதவி போன்றவற்றில் மகிழ்வடைபவர்களால் வழங்கப்படும் அன்பளிப்புத் தொகைகளும் பெறுகின்றனர். இதன் மூலம் வனத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்பவர்களுக்கு குறைந்தபட்ச மாத வருவாயை உறுதி செய்து, அவர்களால் காடுகளுக்கு ஏற்படும் இடையூறை குறைத்துள்ளனர். மேலும் அவர்கள் கடத்தல், வேட்டை போன்ற வனச் சட்டங்களுக்கு புறம்பாக ஈடுபடுவதையும் பெரும்பாலும் குறைத்துள்ளனர். சின்னாறு காட்டுயிரிக் காப்பகத்தில் பணிபுரியும் மலைப்புலையர் சமூகத்தை சேர்ந்த நண்பர் ஒருவர், தானும் தன் மனைவியும் சேர்ந்து  சீசன் காலங்களில் மாதம் 13-15 ஆயிரங்கள் பணம் ஈட்ட முடிகிறது என்று கூறிய போது உள்ளூர உவகை ஏற்பட்டது. கேரளத்திற்குள் உள்ள அனைத்து சரணாலயங்கள், காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் ஆகியவற்றின் மையக, இடையக மண்டலங்களின் எல்லைகள் ஏற்கனவே தெளிவாக வகுக்கப்பட்டுள்ளதால். நீதிமன்றத்தின் சுற்றுலா தடைத் தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து வந்த 20 சதவீத இடங்களில் தடை நீக்கம் போன்ற தீர்ப்பும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அன்றும், இன்றும், என்றும் மையகப் பகுதிகளில் அவர்கள் மனித நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருந்தனர், வைத்திருக்கின்றனர், வைத்திருப்பர். பரம்பிக்குளத்திலிருக்கும் காடர் இனத்தை சேர்ந்த பழங்குடித் தோழன் ஒருவன் உங்கள் மாநில அரசின், வனத் துறையின் மெத்தனப் போக்கின் காரணமாக மூன்று மாதமாக வருவாயிழந்துள்ளோம் என்று கூறியதைக் கேட்கும் போது அவமானமாகத் தான் இருந்தது. தமிழகத்தில் புலிகள் காப்பகங்களில் சுற்றுலா தடை செய்யப் பட்டிருந்த காலத்தில் பரம்பிக்குளத்தில் தடையேதுமில்லை. ஆனால் பரம்பிக்குளம் வனப் பகுதிக்கு செல்ல ஒரே சாலை தமிழக டாப்ஸ்லிப் வழியாகத் தான். சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரம்பிக்குளத்திற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதே இதற்கு காரணம்.


நம் நாட்டில் பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடுகள் இந்த லட்சணத்தில் இருக்கும் பட்சத்தில். அரசுகளைவிட பழங்குடியினர் காடுகளுக்கு குறைவான அழிவையே ஏற்படுத்திகின்றனர், அரசுகளை விட நன்றாகவே பேணிக் காக்கின்றனர் என்று கூறுவது தவறா என்ன? அதே நேரத்தில் சரணாலயங்களோ, காப்பகங்களோ, தேசியப் பூங்காக்களோ தேவையில்லை என்பதல்ல என் கருத்து. அவற்றின் விதிமுறைகள் தெளிவாக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவானதாய் மாற்றியமைக்கப்பட்டு, பழங்குடி மக்களின் நலனை கருத்தில் கொள்வதாக இருத்தல் வேண்டும். விதிமுறைகள் என்பது அரசுகளுக்கும், முதலாளிகளுக்கும் வளைந்துக் கொடுப்பதாகவும், வன வாசிகளுக்கு மட்டும் கடுமையானதாகவும், வாழ்வாதாரங்களை மறுத்து பசியில் வாட விடுவதாகவும் ஒரு போதும் இருக்கக் கூடாது.

பழங்குடியினர் மட்டுமே வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும் நான் எங்கும் குறிப்பிடவில்லை. அழிவுகளை ஏற்படுத்தி, சமவெளிகளில் இருந்த மக்களும், முதலாளிகளும் செய்த அழிவுகளுக்கு துணை நின்ற அரசுகள் பழங்குடியினர் மீது பழியை போடும் செயல் கடைந்தெடுத்த பொய்யென்று குறிப்பிட்டு இருந்தேன். மேலும் அதற்கான புள்ளி விவரங்களையும் அளித்திருந்தேன். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளில் நீலகிரியில் பெருகியிருக்கும் விவசாய நிலங்களின் பரப்பளவு வெறும் 2000 ஹெக்டேர். வனங்களை அழித்து உருவாக்கப்பட்டுள்ள தேயிலை தோட்டப் பயிர் நிலங்கள் சுமார் 12,000 ஹெக்டேர்.

கடைசியாக, தமிழகத்தில் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் பழங்குடியினர் தமிழ் நாட்டில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். மற்றவர்கள் வெளிச்சந்தையை சார்ந்து வாழ்கின்றனர் என்ற கூறியிருப்பது. கேரள எல்லை நெடுக்க நீலகிரியிலிருந்து குமரி மாவட்டம் வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள், வட மாவட்டங்களில் உள்ள ஜவ்வாது மலைகள், உள் மாவட்டங்களில் இருக்கும் சேர்வராயன் மற்றும் கொல்லி மலைகள் ஆகியப் பகுதிகளில் 20 வருடம் முன்பு வரை காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் பழங்குடியினர் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேலாகவே இருந்தனர். பெரும்பாலும் அரசுகளின் மோசமான திட்டம் தீட்டுதலும், செயல்படுத்துதலும், மேலும் அதிகார துஷ்பிரயோகங்களாலும், காடுகள் அழிக்கப்பட்டதாலேயுமே அவர்களெல்லாம் வெளிச்சந்தையை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விளைவு மோசமான தொடர்புகள், அவர்களுக்கு விலை போய் சட்ட விரோத கூலிகளாக மாறியது.

நோக்கம் காடுகளை காப்பாற்றுவதா? வாழ்வாதாரமா? என்றால், நிச்சயம் மேம்பாடு, வளர்ச்சியென்ற பெயர்களில் அரசு செய்யும் அழிவிலிருந்தம், அரசின் அமோக ஆதரவுப் பெற்ற பெருமுதலாளிகளிடமிருந்தும், அதிகார மட்டத்தில் ஆள் பிடித்து வைத்துக் கொண்டு கடத்தல் கைங்கரியங்களை நடத்துபவர்களிடமும் இருந்தும் காடுகளைக் காப்பதும், அக்காடுகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்பவர்களை வனப் பாதுகாப்பு, விலங்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அலைக்கழித்து வறுமையில் உழலவிடுவதையும் தடுக்க வேண்டும். அரசும், வனத்துறையும் விலங்குகள் மேல் கொண்ட பாசம் எப்படிப்பட்டது என்பதை திருவண்ணாமலை, விழுப்பரம் மாவட்டங்களில் ஊர்களுக்கும் நுழைந்து, வனத்துறைக்கு நெடு நாட்கள் போக்குக் காட்டி பிடிபட்ட ஆறு யானைகளை கும்கியாக்க துடிக்கும் விஷயத்தில் பார்க்கலாம். நீதிமன்றம் கும்கி யானைகளாக்க கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் மேல் முறையீடு செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் புரியவில்லையா? விலங்குக் காப்பகங்கள் மேல் இவர்கள் எவ்வளவு அக்கறைக் காட்டுவார்கள் என்று. 

"மரணத்திற்கான துரிதப் பாதையா?"

September 24, 2013 at 2:19am

இரண்டு நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஓர் விஷயம் நீலகிரிக்கு கோவையிலிருந்து மூன்றாவது மலைப் பாதை அமைப்பதற்கான அளவைப் பணிகள் முடிவுற்றிருப்பதாக வந்திருக்கும் செய்திகள். இது நற்செய்தி தானே, இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது என்று சிலர் எண்ணக் கூடும். அழிவிற்கான மூன்றாவது பாதையை அமைக்க முயல்கிறார்களே என்பதே என் வருத்தம். இதன் பின்னணியில் சில முக்கிய விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காகவே இந்த பதிவு.

தமிழகத்தின் வடமேற்கு கோடியில் உள்ள நீலகிரி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான பகுதிகளில் ஒன்றாகும். புவிக்கோளத்தின் மிகப் பழமையான நிலப் பகுதிகளில் ஒன்று இப்பிரதேசம். உலகின் மிக அழகிய, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, அற்புதப் பிரதேசமான இம்மலைத்தொடர்  குஜராத்தின் தென் முனையிலிருந்து குமரி வரை 1600 கி.மீ தொலைவிற்கு நீண்டிருந்தாலும் 2000 மீட்டருக்கு மேல் உயரமான முகடுகளைக் கொண்ட பகுதிகள் இத்தொடரின் தெற்கு பகுதிகளான கேரள, தமிழக மாநில எல்லைகளிலேயே அதிகம் உள்ளன. உலகின் பல்லுயிர்த் தன்மை மிகுந்த (Bio-diversity Hot spots) எட்டு பிரதேசங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்று. மேலும் மராட்டியம், கர்னாடகம், கேரளம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு மழை வளம் அளிக்கும் கடவுளாகவும், நீர்த்தேக்கும் தொட்டியாகவும் விளங்குகிறது. இயற்கை வனப்பு மிகுந்த இம்மலைத் தொடரின் பெரும்பாலான பகுதிகள் உலக பாரம்பரிய தளங்களுள் (World Heritage Sites) ஒன்றாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தினால் (UNESCO) அறிவிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நில அமைவு, காடுகளின் தன்மை, காணப்படும் தாவரங்களின் வகைகள் போன்றவற்றை வைத்து வட மற்றும் தென் பகுதிகளாகப் பிரித்துக் கூறுவர். இத்தொடரின் வட மற்றும் தென் பகுதிகளுக்குள்ளான மாற்றங்கள் தென்படத் தொடங்குவது வட கேரளத்தின் வயநாடு பீடபூமியிலிருந்து. இதற்கு தெற்கேயுள்ள நீலகிரித் தொடர் மற்றும் ஆனைமலைத் தொடர்களில் தான் 60க்கும் மேற்பட்ட மலை முகடுகள் 2000 முதல் 2695 மீட்டர் வரை உயர்ந்தும் குளிர்ந்தும் நிற்கின்றன. இப்பிரதேசங்களில் உள்ள அடர் கானகங்கள் தாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே தோன்றி பரிணாமடைந்த (endemic species) பல்வேறு உயிரினங்களின் வகைகளுக்கு வீடாக விளங்குகின்றன. நிலவியலாளர்களும், உயிரியில் ஆய்வரும் இதற்கு பல்வேறு சான்றுகளை முன் வைக்கின்றனர். மனிதத் குடியேற்றமும், வளர்ச்சியும் நாகரிகமும் கூட பழங்காலம் தொட்டே நிலவி வருவதற்கு மானுடவியலாளர்கள் இப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களான தோடர்கள், முதுவர்கள், காடர்கள், புலையர்கள், பணியர்கள், படகர்கள், பெட்ட குறும்பர், கசவர் ஆகியோரைக் கொண்டு நடத்திய ஆய்வுகளின் துணைக் கொண்டு கூறுகின்றனர்.

இத்தகைய சூழலியில் சிறப்பு பெற்ற பகுதியாக விளங்கும் நீலகிரித் தொடர் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் 1986ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் “உயிர்கோள இருப்பிடமாக” (Biosphere Reserve) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) “மனிதனும் உயிர்க்கோளமும்” (Man and Biosphere - MAB) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. 5520 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் உயிர்க்கோளத்தில் ஒட்டு மொத்த முதுமலை – நாகரஹோலே – வயனாடு – பந்திப்பூர் வனத் தொகுப்புகளும், நிலாம்பூர் மலைச்சரிவு காடுகளும், மேல் நீலகிரி பீடபூமியும், அமைதிப் பள்ளத்தாக்கும், சிறுவாணி மலைகளும் அடக்கம். இவற்றில் 2537 சதுர கி.மீ தமிழக எல்லைக்குள்ளும், 1527 சதுர கி.மீ கர்னாடக எல்லைக்குளும், 1455 சதுர கி.மீ கேரள எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன. “உயிர்க்கோள இருப்பிடம்” என்ற கருதுகோளில் இயற்கையும், தனித்தனியே பிரிக்கபட்டு இயற்கை வளங்கள் பாதுகாக்கப் படுவதில்லை, மாறாக இயற்கை வளங்களை மனிதன் முற்றிலும் அழிக்காமல் அவற்றுடன் அவன் கொள்ளும் உறவு, அவற்றை பயன்படுத்தி வாழ்வாதாராமாக்கி, பொருளீட்டி, வாழ்க்கை நடத்துவதாகும். அதன் வாயிலாக இயற்கை வளங்களை அவனைக் கொண்டே மேம்படுத்தி பாதுகாத்தல் என்பது குறிக்கோள். நீலகிரி உயிர்க்கோள இருப்பிட எல்லைகளுக்குள் இருப்பவை,

  • சுமார் 3300 பூக்கும் தாவர வகைகள் உள்ளன. இதில் 132 வகைகள் உயிர்க்கோள இருப்பிடத்திற்கு சொந்தமானவை (endemic ). இவற்றோடு 175 வகையான ஆர்க்கிட் தாவர வகைகளும் உள்ளன. அவற்றில் எட்டு நீலகிரி உயிர்க்கோளத்திற்கு சொந்தமானவை.
  • சுமார் 100க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களும், 350 பறவை இனங்களும், 80 வகையான ஊர்வன இனங்களும், 39 மீன் இனங்களும், 31 இருவாழ்வி இனங்களும், 316 பட்டாம்பூச்சி வகைகளும் நிறைந்துள்ள பல்லுயிர் மண்டலமாக நீலகிரி விளங்குகிறது. இவற்றில் வங்கப் புலி, சிங்கவால் குரங்கு, நீலகிரி லங்கூர், வரையாடு போன்ற மிக அரிய விலங்குகளும், இருவாச்சி போன்ற அரிய பறவையினங்களும், ராஜ நாகம் போன்ற அரிய பாம்பினங்களும் அடக்கம்.
  • பதினோரு பழங்குடி மக்களினங்கள்.
  • 16 முக்கிய பறவை வாழிடங்கள்
  • 7 முக்கிய காட்டுயிரி சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் சேமகங்கள், 10க்கும் மேற்பட்ட காட்டுயிரி வலசைத் தடங்கள்.
  • 12 முக்கிய ஆறுகள் மற்றும் பெரிய ஓடைகள், 25 அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள்.
  • 9 வகையான நில மற்றும் வன அமைப்புகள். இவற்றுள் முக்கியமானவை சோலைக் காடுகள் மற்றும் அவற்றைச் சூழ்ந்த புல்வெளிகள்.

இப்படியொரு சுவர்க்க பூமி இன்று இருக்கும் நிலையையும், நாளையடையப் போகும் நிலையினையும் நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. இவ்வற்புத பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, கடத்தல், தோட்டப் பயிர்கள், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் காடுகளழிப்பு, மண்வள அழிப்பு, விலங்குகள் வேட்டை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தையடைந்து மலைத் தொடரின் நிலவமைப்பின் சமநிலையையும், சுற்றுசூழல் சமநிலையையும் குலைத்து அதீதமான தீய விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்து என்ற பெயரில் மேட்டுப்பளையத்திலிருந்து உதகை, முதுமலை, கூடலூர் வழியாக மைசூர்  செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67ம், வயனாட்டிலிருந்து பந்திப்பூர் வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 220ம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலியில் மாசுபாடுகளும், விபத்தென்ற விதத்தில் செய்யப்படும் வனவிலங்குக் கொலைகளும் ஏராளம். காடழிப்பைப் பொறுத்தமட்டிலும் இதற்கு மேல் அழிக்கவொன்றுமில்லை என்ற நிலையில் தான் நின்றுக் கொண்டிருக்கிறோம். வனவிலங்கு வேட்டை மற்றும் கடத்தல் ஆகியவற்றில் பந்திப்பூர் பகுதி இன்றும் கொடிகட்டி பறக்கிறது என்பது தினசரி செய்திகளை வாசிப்போருக்கு தெரிந்திருக்கும். நாட்டிலேயே இமயத்திற்கும், சுந்தரவனங்களுக்கும் தெற்கே அதிக புலிகள் எண்ணிக்கையுள்ள பகுதியாக நாகரஹோலே-வயனாடு-பந்திப்பூர்-முதுமலை தேசியப் பூங்காக்களின் தொகுப்பு விளங்குகிறது. காரணம் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை பெருமளவில் இருப்பதால். இன்று அங்கு புலிகள் நேரடியாக வேட்டையாடப்பட்டும், மறைமுகமாக தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைவு, உறைவிட அழிப்பு ஆகியவற்றின் காரணமாக கொல்லப்பட்டு வருகின்றன. பிரித்தானியர்கள் நமது வளங்களை சுரண்டி அழிந்ததில் பாதி, வேட்டைத் தடுப்பு, காடழிப்பு தடுப்பு சட்டங்கள் இல்லாத காலங்களில் நாமும், நமது சமஸ்தான அரசர்களும்(!!), தற்கால அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர் தம் மாமன் மச்சினர் சுதந்திரமாக அழித்தொழித்தது மீதி என்ற நிலைமையில் தற்போது எஞ்சியிருக்கும் மிச்ச சொச்ச இயற்கை செல்வங்களையும் நவீன வளர்ச்சியின் பெயரில் முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு எதைத் தின்னப் போகிறோம்? எதைக் குடிக்கப் போகிறோம்?


பின்வரும் புள்ளிவிவரங்களை படித்தால் தலைசுற்றல் வருவது நிச்சயம். முதலில் இருப்பது 1849ல் ஆக்டர்லோனி என்பவரால் அளிக்கப்பட்டிருக்கும் உயிர்ச்சூழலைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் பரப்பளவுகள். அடுத்து உள்ளது 1993 வாக்கில் அதே வகை நிலங்களின் பரப்பளவுகள்.


நில அமைப்புகள் - சோலைக் காடுகள்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 8,600
1993ல் - ஹெக்டேரில் 4,225
51% வீழ்ச்சி
நில அமைப்புகள் - புல்வெளிகள்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 29,875
1993ல் - ஹெக்டேரில்4,700
85% வீழ்ச்சி
நில அமைப்புகள் - விவசாய நிலம்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 10,875
1993ல் - ஹெக்டேரில் 12,400
12% உயர்வு
நில அமைப்புகள் - தேயிலைப் பயிர்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 0
1993ல் - ஹெக்டேரில் 11,475

நில அமைப்புகள் - தைல மரங்கள்
ஆக்டர்லோனி (1849) - ஹெக்டேரில் 0
1993ல் - ஹெக்டேரில் 5,150


இவற்றை உற்று நோக்கினால் தெரிய வரும் ஒரு மகத்தான உண்மை, விவசாய நிலங்களுக்காக பழங்குடியினரும், காடுகளின் அருகே வாழும் கிராமத்தினரும் காடுகளை அழிக்கிறார்களென அரசுகள் கூவி வருவது முதல் தரக் கட்டுக்கதை என்பது. அழிவை ஏற்படுத்தியது சர்வ-நிச்சயமாக அரசுகளும், பெரு முதலாளிகளும், கடத்தல் மன்னர்களும், அரசியல் புள்ளிகளும், பெரு அதிகாரிகளும், பொருளீட்டும் பேராசைக் கொண்ட நகரிய நாகரிகத்தை சேர்ந்தவர்களுமேயன்றி பழங்குடியினரல்ல, சிறு விவசாயிகள் அல்ல. மேற்கூறிய அனைவரும் தான் செய்யும் திருட்டுத் தனங்களுக்கும், ஏற்படுத்தும் அழிவுகளுக்கும் பிற்கால பழங்குடி சந்ததியினர் சாட்சியாக இருந்துவிடக் கூடாதே என்பதற்காகவே புலிகள் சரணாலயங்கள், காப்பகங்கள், வன விலங்குப் பாதுகாப்பு என ஏமாற்றி அவர்களை காடுகளிலிருந்தும், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல்லாயிர வருடக் கணக்காக இவர்களைக் காட்டிலும் அவர்கள் செம்மையாகவே அவர்களின் வனங்களை பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்களில் முக்கியமானது சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகளின் பரப்பளவுகளில் உள்ள மாபெரும் சரிவு. இந்த சோலைக்காடுகள் – புல்வெளிகள் உலகின் மிக அரிய, தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் உயர் முகடுகளின் (பெரும்பாலும் 1800 மீட்டர்களுக்கு மேல்) பிரத்யேகமாகக் காணப்படும் ஒரு சூழலமைப்பு ஆகும். உயர் மலை முகடுளில் புல்வெளிகளும், முகடுளுக்கு இடையேயான பள்ளத்தாக்குகளில் பசுமைமாறா ஈர காடுகளும் அமைந்திருக்கும். இவ்வகை சூழலமைப்புகள் பெரும்பாலும் வருடம் முழுவதும் ஈரத் தன்மையுடனே இருக்கும். மழை பொழிவிற்கு சோலைகளும், பெய்யும் மழையை மண்ணில் சேகரித்து ஆறுகள் ஊற்றெடுக்க புல்வெளிகளும், ஊற்றெடுக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுக்க, மழை பெய்யவும் சோலை-புல்வெளி சூழல் தொகுதிகள் உதவி புரிகின்றன. தென்னிந்தியாவின் எல்லா முக்கிய நதிமூலங்களைத் தேடிப் பார்ப்பாமேயானால், அவையனைத்தும் ஏதோவொரு சோலைக் காட்டில் தான் ஊற்றெடுக்கிறது என்பதை அறியலாம். ஆறுகளின் உயர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இச்சூழல் தொகுதிகளே விளங்குகின்றன. இங்கிருந்து பெருக்கெடுக்கும் ஆறுகள், நீரோடைகள் தான் அடுத்தக் கட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (சுமார் 1600 மீட்டர் உயரங்கள், அதற்குகீழ் உள்ள உயரங்கள்)  நீர்தேக்கங்களில் தேக்கப்பட்டு அணைகளின் மூலம் சிறிது சிறிதாக வெளியேற்றப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சோலை-புல்வெளி சூழல் தொகுதிகளின் அழிவே மழை பொழிவில் குறைவையும், ஆறுகளின் நீர்வரத்தை குறைவையும் ஏற்படுத்தி உள்ளது. “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” என்பான் கம்பன். சத்தியமான வார்த்தைகள்,  நீர்வளம் குறைவது நிச்சயம் நதியின் பிழையல்ல, நம் பிழையே. இருபது ஆண்டிற்கு முன்னரே இவ்வீழ்ச்சி, தற்போது இப்புள்ளிவிவரங்களில் மேலும் வீழ்ச்சிகள் உண்டாகியிருக்கும். நீருக்காக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்கள் குறைவு. நமக்கு பிறகான தலைமுறையினர் எதிர்கொள்ளப் போவது அதிகம். இதுவரை கண்டவை “நீலகிரி உயிர்க்கோள இருப்பிடம்” முழுவதற்கும் இவ்வழிப்புகள் பொதுவானவை.


நீலகிரி உயிர்க்கோள இருப்பிடத்தில் உள்ள தமிழகப் பகுதிகளில் தான் ஒப்பீட்டளவில் மிக மோசமான காடழிப்பு, மண்வள அழிப்பு ஆகியவை நடந்தேறியுள்ளன. கூடலூரைத் தாண்டி கேரள வயனாட்டிற்கோ, கர்னாடக நாகரஹோலேவுக்கோ சென்று வந்தவர்கள் கண்டிருக்கக் கூடும். சுற்றுலா, நகர்மயமாதல், மலைப் பகுதி மேம்பாடு என்ற பெயர்களில் அரசும், பொது மக்களும், முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு இவ்வழகிய நிலப் பகுதியை அலங்கோலப்படுத்தியாயிற்று. உதகையில் 6 மாதம் பணி நிமித்தமாக தங்க வேண்டியிருந்தப் போது ஒன்பதாவது மைல் என்ற இடத்திலுள்ள ஏரியில் மீன் பிடிக்க செல்லலாம் என்று நண்பர் ஒருவர் கூற, நான்கு பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். கேரளத்திலுள்ள அற்புதமான நீர்நிலைகளைப் போன்ற ஒன்றை எதிர்பார்த்துப் போன எனக்கு அதிர்ச்சி, உதகையின் ஒட்டு மொத்த கழிவில் பாதியை சுமக்கும் ஒரு சாக்கடையாக அந்த ஏரி இருந்தது. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், எங்களூரில் என் வீட்டிற்கு பின்னிருக்கும் ஏரி உட்பட எங்கும் அப்படியொரு அழுக்கான நீர்நிலையைக் கண்டதில்லை. இத்தனைக்கும் அந்த ஏரி உள்ளப் பகுதி “பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி” (Reserve Forest) ஆகும்.   ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழைகளின் போது நீலகிரியில் தமிழகப் பகுதிகளின் மலைப்பாதைகளிலும், உதகை, கோத்தகிரி போன்ற நகரங்களிலும் ஏற்படும் மண் சரிவுகள் மிகப் பிரசித்தி பெற்ற நிகழ்வு ஆயிற்றே. எத்தனை பேர் செத்தால் நமக்கென்ன, எவ்வளவு அழிவு ஏற்பட்டால் நமக்கென்ன? மண் அரிப்பு ஏற்பட்டால் என்ன? வெட்டு மரத்தை என்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும், ஒட்டு மொத்த மலையையும் சரித்து மேட்டுப்பாளையத்தையும் காரமடையையும் மேலும் உயரமாக்க.  இருக்கிற சாலை வசதிகளால் இப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் போதாதென்று, புதிதாக ஒரு வழியமைக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது உள்ள சாலைகளிலேயே அத்தியாவசிய போக்குவரத்தைத் தவிர்த்து மற்ற சுற்றுலா வாகனங்கள், தமிழகத்திலிருந்து கேரளா, கர்னாடகா செல்லும் சரக்கு வாகனங்களையுமே அளவுடனும், முறைப்படுத்தியும் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கி ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த மூன்றாவது பாதையை வேறு அமைக்க எத்தனிக்கின்றனர். “எல்லோருடைய வீடுகளிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத பாதையொன்று சுடுகாட்டை நோக்கி போடப் பட்டுள்ளது” என்று ஓர் அரேபிய பழமொழி இருப்பதாக எங்கேயோ படித்த நியாபகம். என்னைப் பொறுத்த மட்டிலும் சமவெளிப் பகுதிகளிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு வனங்களினூடே செல்லும் ஒவ்வொரு பாதையும் நம்மை குழுவாக அடக்கம் செய்யப் பயன்படப் போகும் சுடுகாட்டிற்கு செல்லும் துரித-வழி சாலைகளே. இப்போதே குடிநீரை சந்தைப் பொருளாக்கி சாதனைகள் படைத்தாயிற்று. மேலும் காடுகளின் அழிவு, அடுத்தத் தலைமுறையை எங்குக் கொண்டு சேர்க்குமோ தெரியவில்லை.




இவைப் போன்ற பகுதிகளுக்கு வணிகச் சுற்றுலா என்ற பெயரில் நண்பர்களுடன் பீர் பாட்டில் உடைத்து, வேசியை புணர்ந்து ஆணுறைகள் வீசி, பிளாஸ்டிக் பைகளை மண்ணில் புதைத்து சீரழிப்பதிற்கு துணைப் போவதற்கு பதிலாக கேரள சரணாலயங்கள், காப்பகங்களில் செய்வது போல் சூழலியல் சுற்றுலாத் (Eco-tourism) திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆதிவாசி சமூகத்தினருக்கும் சிறு, குறு வேலை வாய்ப்புகளை வழங்கலாம், அதே நேரத்தில் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்த முயற்சிக்கலாம். சோலைக் காடுகளும், புல்வெளிகளும் அழிவதால் நீராதாரம் மட்டுமே கெடுவதில்லை. நுண்ணுயிர் முதல், செடிகள், மரங்கள், கொடிகள், விலங்குகள், பூச்கிகள் என பல்லுயிர்க் கோவைகள் முற்றிலுமாக அழிந்து போகின்றன. பரிணாமத்தில் பல லட்சம் ஆண்டுகளாகப் படிப்படியாக முன்னேறி புவியில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் உயிரினத்தை ஓரிரு ஆண்டுகளில் முழுவதுமாக உலகில் இல்லாமல் அழித்தொழிப்பது எவ்வகையில் நியாயமாகும்? காடுகள் மற்றும் நீரின் அவசியம் குறித்த கட்டுரையொன்றில் நாஞ்சில நாடனின் வரியொன்று நினைவுக்கு வருகிறது, “விதைப்பைகளை அறுத்துப் பொரித்துத் தின்றுவிட்டு, இனவிருத்தி செய்ய இயலாது”. ஆம் நண்பர்களே! அழிப்பதற்காகவோ, கெடுப்பதற்காகவோ இல்லை காடும், மலையும் என்பதை இளைய தலைமுறையினருக்கு நாம் தான் கற்றுத் தர வேண்டும். எதிர்வரும் தலைமுறையினருக்கு தண்ணீர் வேண்டுமாயின் இப்போது இருப்பதைக் காட்டிலும் காடுகள் பெருகி, அவை பேணிக் காக்கப் படவும் வேண்டுமென்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது பெற்றோரின் கடமை.

--

ஞானசேகர் விஜயன்..

--

விவரங்கள் - www.nilgiribiospherereserve.com

மோதி - ஆபத்பாந்தவனா, ஆபத்தானவரா?

July 29, 2013 at 12:03am

மாநிலத்தின் அபரிமிதமான மற்றும் துரித வளர்ச்சி, குஜராத் படுகொலைகள் - மோதியின் ஆதரவாளர்களும்,  எதிர்ப்பாளர்களும் இந்த இரு விஷயங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களின் மேல் நம்பிக்கைகளை வைத்துள்ளனர். இரு தரப்பின் மீதும் எனக்கிருக்கும் கருத்துக்களாவன:

எதிர்ப்பு:      மோதி முதன்மை அமைச்சாராகக் கூடாது என்பதற்கு குஜராத் கலவரங்களை  மட்டும் காரணமாக கூறுவது என்னை பொறுத்த மட்டிலும் வேடிக்கையாகவே இருக்கிறது. ஏனென்றால்,

குஜராத்தில் நடைபெற்ற ஒரே மதக் கலவரமல்ல அது. இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தூண்டுதல்களின் பேரில் ஏற்கனவே பல கலவரங்களை கண்ட மாகாணம்.

மோதியின் போட்டியாளர்கள் எவரும் அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களை செய்யாதவர்களும் அல்ல. அது பா.ஜ.கட்சியிலேயே வேறு ஒரு வேட்பாளராக இருக்கட்டும், காங்கிரஸ் வேட்பாளராக ஆகட்டும் அல்லது பாரத துணைக் கண்டத்தின் வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் வேட்பாளராகட்டும். ஏதோ ஒரு வகையில் நம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொத்து கொத்தாக கொன்று குவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மோதி முன்னின்று நடத்தியதாக கூறப்படும் படுகொலைகளுக்கு முன்  நாடு முழுவதும் நடந்த பல்வேறு படுகொலைகளை விட்டு விடுவோம். கடந்த பத்தாண்டுகளில்  தற்கொலை செய்துக் கொண்டு மாண்டு போன விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு ? அவையெல்லாம் என்ன விவசாயிகள் முட்டத் தின்று செறிக்கவில்லை என செய்துக் கொண்ட தற்கொலைகளா? அதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தானே ?  இவையெல்லாம் எந்த கணக்கில் சேரும்?

கொல்லப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நாம் மொத்தத்தில் தேர்தலையே புறக்கணிக்க வேண்டும். எந்த கட்சியும் நமக்கு  நல்வாழ்வை அளிக்க முற்பட்டெல்லாம் தேர்தலில் போட்டியிடவில்லை. "எரிகிற கொள்ளிகளில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி" என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே நமக்கு அளிக்கபட்டிருக்கிறது. எல்லா கொள்ளிகளும் நம்மை சுட்டெரிக்கவே போட்டியிடுகின்றன. வேகமாக சில கொல்லும், மெதுவாக சில கொல்லும், நேரடியாக சில கொல்லும், மறைமுகமாக சில கொல்லும் அவ்வளவே.

ஆதரவு:         வளர்ச்சி என்ற மாயையை மட்டுமே காரணமாகச் சொல்லி  மோதி மட்டுமே நம் வாழ்வுகளை துலங்க வைக்கும் வல்லமை படைத்த ஒரு பிரதம வேட்பாளர் என்று முன்னிறுத்துவதும் மிக அபத்தமானது. மோதியின் தீவிர வலது சாரி, முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் கண்டிப்பாக சமூகத்தில் சமச்சீரற்ற வளர்ச்சியையே கொண்டு வந்து சேர்க்கும். உலகம் இன்றுவரை கண்டு கொண்டிருப்பது இதைத் தான். சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் மிகத் துரிதமான பொருளாதார அடிப்படையிலான் வளர்ச்சியையும், இன்னொரு பிரிவு மிக மோசமான தேக்க நிலை அல்லது  எதிர்மறை வளர்ச்சியையுமே அடைவர்.

இப்போது நாம் கண்டு கொண்டிருப்பது முதல் பிரிவினரின் ஜிகினாக்களை மட்டுமே. வேகமாக பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் சமூகப் பிரிவினரை சிறிது காலத்தில் அடையாளம் காண்போம். துரதிர்ஷ்டவசமாக இந்தியா முழுவதிலுமே, இந்த அறுபது ஆண்டு காலத்தில் வளர்ச்சி காணும் பிரிவிற்காக எதிர்மறை வளர்ச்சியையும், தேக்க நிலையயும் அனுபவித்துக் கொண்டிருக்கும் சமூகப் பிரிவின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்துஆட்சியாளர்களோ, ஆட்சியில் இல்லாத எதிர் மற்றும் வேறு கட்சியினரோ, வளர்ச்சியின் ருசியினை அனுபவிக்கும் எதிர்தரப்பு சமூகப் பிரிவுகளோ ஒரு போதும் அக்கறை கொண்டதில்லை.

எனவே மோதி என்பவர் ஆதரவாளர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவுக்கு ஆபத்பாந்தவனும் இல்லை,  எதிர்ப்பாளர்கள் பயமுறுத்தும் அளவிற்க்கு (மோதி மட்டுமே) ஆபத்தானவரும் இல்லை (குற்றஞ்சாட்டுபவர்களும் அதே அளவு ஆபத்தானவர்கள் தான்).  நரேந்திர மோதியும் 60 ஆண்டுக் காலமாக சம்பிரதாயத் தேர்தல்களில் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் சராசரி வேட்பாளர் மட்டுமே. நாம் நமது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மெல்லச் சாவோம் அல்லது ஒரே நாளில் கொல்லப்படுவோம். யார் பிரதமரானாலும் இது தான் நமக்கு விதிக்கப்பட்ட முடிவு.

உலகின் சுவாச வெளியைக் காப்போம்


June 5, 2013 at 2:19pm



காட்சிக்கினியதாக இருக்கும் இத்தேயிலை தோட்டங்கள் தான் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழைக்காடுகள் அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாகும்.இப்பசுமை பாலைவனங்களை உருவாக்க ஆங்கிலேய கொள்ளையர்களால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பெற்ற இவ்வழிப்புகள் இன்று வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. தோட்டப்பயிர்களை பயிரிடவும், வணிக நோக்கத்திற்காகவும், சுற்றுலா வளர்ச்சிக்காகவும் கர்னாடகத்தின் குடகு பிரதேசம் தொடங்கி பிரம்மகிரி, தமிழகக் கேரள எல்லைகளையொட்டி நீலகிரி, ஆனைமலைகள், பழனி மலைகள், ஏலமலைகள், குமரி வரை சுமார் 1000கி.மீ தூரத்திற்கு விட்டு விட்டும், சில இடங்களில் தொடர்ச்சியாகவும் இருந்த உலகின் மிக அரிய மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததில் ஐந்து சதவீத்ததிற்க்கும் குறைவான மழைக்காடுகளே எஞ்சியிருக்கின்றன. இதனால் இப்பகுதிகளின் பல்லுயிர்த்தன்மை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.


இவ்வழிப்பின் பயன்களை பருவமழை பொய்த்த கடந்த ஆண்டிலும், இவ்வாண்டின் கோடையிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆறுகளில் நீர்வரத்து குறைவு, உயரும் வெப்பனிலை போன்றவற்றால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கிறது. மிக அரிய வனவிலங்குகளின் எண்ணிக்கைகள் சரிந்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாம்ல் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்க்கு வனவிலங்குகள் உணவுக்காகவும், நீருக்காகவும் மலைகளினூடே இருக்கும் வனப் பகுதிகளிலிருந்து மலையடிவார சமவெளிகளிலுள்ள கிராமங்களையும், நகரங்களையும் நோக்கி படையெடுத்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி போன்ற மாவட்டங்களில் பல ஏக்கர் நிலங்களில் பயிர்கள் யானைகளால் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இவ்வனைத்தும் நமது அரிய செல்வங்களான மழைக்காடுகள் அழிக்கப்பட்டதின் விளைவுகளே.


மழைக்காடுகள் இயற்கை நமக்களித்த மாபெரும் கொடை. மொத்த உலகிற்குத் தேவையான உயிர்வளியை வெளியேற்றிக் கொண்டிருப்பவை. அதனால் உலகின் சுவாச வெளியாக திகழ்பவை. அவற்றை முழுமையான அழிவிலிருந்துக் காக்க அழிவை ஏற்படுத்துபவர்களை எதிர்க்கவும், எதிர்க்கத் தவறும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகளையும் செய்ய முயல்வோமென "உலக சூழல் தினமான" இன்று உறுதியெடுப்போம்..

Wednesday 10 April 2013

வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்

 மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் மதிய இடைவேளைக்குப் பிறகான முதல் வகுப்பு. தமிழ் ஐயா யாதொரு சுவாரசியமும் இன்றி, பல்லில்லாதவன் பரோட்டா தின்பது போல வாலி வதைப் படலம் நடத்தி கொண்டு இருந்தார். வாலி வதைப் படலத்தைக் கூட சுவாரசியம் இல்லாமல் நடத்தும் புலமையும் திறமையும் அவருக்கு இருந்தது. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஆசிரியர் முகத்தையே பார்க்காமல் ஆங்கில வழிப் பட்டப்படிப்பு. தொடரஞ்சல் வழி தமிழ் முதுகலைப் படிப்பு.

    வாலி இருந்தாலும் செத்தழிந்தாலும் ஒன்றுதான். மதிப்பெண்கள் நோக்கிய பாய்ச்சல். சீனிகிழங்குத் தின்ற பன்றி. ஏற்கனவே பணியில் இருந்ததால் அதிக மதிப்பெண்கள் வேண்டும் என்ற ஆசை கூட அற்றுப் போயிருந்தது. போராட்டு இல்லாத வாழ்வு. பட்டம் கிடைத்தால் மூன்று சம்பள உயர்வுகள். நூற்று முப்பத்தேழாவது சம்பள கமிஷன் எப்போது அமலுக்கு வரும், தேக்கத் தொகை எத்தனை கிடைக்கும், மூத்தமகள் நீள்கயற்கண்ணிக்கு இன்னும் பத்துப் பவுன் சேர்ப்போமா அல்லது குமரக்கோயிலாண்டி பைனான்சில் மூன்று வட்டிக்கு மேலும் ஐம்பதினாயிரம் போட்டு வைப்போமா, ஒரு செம்பு நிலவாய் இலவசமாக, மகள் கல்யாணமாகிப் போனால் பொங்கல்படி கொடுக்கத் தோதாக கிடைக்கும் – எனும் சிந்தனைகள் சிக்கெனப் பிடித்து ஆட்டி கொண்டிருந்தன.

    அன்று பிற்பகலில், பகல்-இரவு ஒரு நாள் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இருந்தது. மாணவர்கள் எப்போது மூன்றரை மணியாகும், வீட்டுக்குப் போய் தவசிருக்கலாம் என்ற பரபரப்பில் இருந்தனர். மேலும் எப்போது மின்வெட்டு இருக்கும், எப்போது திரும்ப வரும் என்பது மின்சார கடவுள்களுக்கே தெரியாத மாதங்கள். அது பற்றிய ஆழ்ந்த கவலை வேறு. நாற்பத்தெட்டு மாணவருக்கும் தமிழ் ஐயாவுக்கும் நாற்பத்தொன்பது வகையான சிந்தனைகள் என வகுப்பு குவி மையம் கொண்டிருந்தது.

    “பறித்த வாளியைப் பரு வலித் தடக்கையால் பற்றி” என்று வாசித்து நிறுத்தியவர், “சரம், பகழி, வாளி எல்லாமே ஒரே பொருள்தான். வாளி என்றால் பொருள் தெரியுமா? குமரேசன் சொல்லு” என்றார்.

“வாளிண்ணா கிணத்திலேருந்து தண்ணி கோரக்கூடிய சாதனம் ஐயா.”

“சீ, அலவலாதி நாயே ! வாளிண்ணா அம்புடா அம்பு. அன்பு இல்லே, அம்பு தெரிஞ்சிக்கோ. நீயெல்லாம் தமிழ் படிச்சு நாட்டை தலைகீழா நாட்டப் போறே ? ம்... “

வாலியை அந்த வகுப்பிலேயே கொன்று வீடுபேறு கொடுக்கும் உத்தேசம் இல்லை அவருக்கு. அது தவறாமல் பள்ளி இறுதித் தேர்வில் வரும் பகுதி. வராக அவதாரம் போல் சற்று ஆழமாகத் தோண்டித் தான் பார்க்க வேண்டும் செய்யுளை.

பக்கத்து அறை, ஒன்பது பி, பூகோள ஆசிரியர் மாணவருக்கு சிறு தேர்வு எழுத சொல்லி இருப்பார்போலும். வெளி வராந்தாவில் நின்று பல் குத்த ஈர்க்கு தேடிக் கொண்டிருந்தார். மத்தியானச் சாப்பாட்டில் முற்றல் சீனி அவரைக்காய் துவரன். பல்லிடுக்கில் புகுந்து கொண்டிருந்தது. தசரத இராமனின் அம்பு ஒன்று இரவல் கிடைத்தால் கூட நன்றாக இருக்கும். ஆனால் அவன் அம்பு ஒன்று வாலியிடம் சிக்கிக் கொண்டிருந்தது.

அம்பில் பொறித்திருந்த இராம நாமத்தை எழுத்துக் கூட்டிப் படிக்குமாறு வாலியை விட்டுவிட்டு தமிழ் ஐயாவும் வராந்தாவுக்கு வந்தார்.

“என்ன சார்வாள் ? சக்கை பிசின் காலேல இருந்தே சள்ளு சள்ளுண்ணு விழுகாரு ?”

சக்கைப் பிசின் என்பது தலைமை ஆசிரியரையே எப்போதும் ஒட்டிக் கொண்டு திரியும் கணித ஆசிரியரின் காரண இடுகுறிப்பெயர்.

“அவன் கெடக்கான். காலம்பற தினத்தந்தி பாத்தேரா ? குமரி சீட்டு கம்பெனி திவால். புள்ளிக்காரனுக்கு அதிலே அம்பதாயிரத்துக்கு சீட்டு ஒண்ணு உண்டும். இன்னும் புடிக்கலே. பதினேழு தவணை ஆயாச்சாம்.”

“ஓ, அதானே பாத்தேன். டியூசன் எடுத்து கொள்ளையடித்த காசு இப்படித்தான் போகும். வேய்.... பாவப்பட்ட பிள்ளைகள் கிட்டே கூட கழுத்தப் பிடிச்சு நெரிச்சு வாங்கீருவான்.... “

மாணவர்களை மேற்பார்க்க பூகோள ஆசிரியர் வகுப்பறைக்கு திரும்பியதால், வலி பொறுக்க முடியாமல் கிடந்த வாலியை காப்பாற்றும் பொருட்டு, தமிழ் ஐயா வகுப்பினுள் நுழைந்தார்.
சற்று சலசலப்பு அடங்கியது.

“மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரத்தை” என்று வாசித்து நிறுத்தி வகுப்பை நோட்டமிட்டார்.
கடைசி வரிசையில் மூன்று பேர் டெஸ்க் மேல் தலைசாய்த்துக் கிடந்தனர். அதற்குல் தூங்கிப் போய்விட்டார்களா என, உறக்கம் கலையாமல் கையும் களவுமாய்ப் பிடித்துவிட வேண்டும் என்று மெல்லடி வைத்துப் போனார்.

உறங்கிப் போனவர்களாய்த் தெரியவில்லை.

உடல்களில் விறைப்பும் துடிப்பும் இருந்தது. அவரவர் கைகள் அவரவர் குறிகளில்.

தமிழ் ஐயாவுக்கு அறம் சார்ந்து ஒழுக்கம் சார்ந்து இயங்கும் சகல் நரம்புகளும் புடைத்துத் துடித்தன.

“எழுந்திருங்கடா நாய்களா” என உரத்த குரலில் கூச்சலிட்டார். பதறிப் போய் எழுந்து நின்றனர். என்ன நடக்கிறது என்ற ஆவலில் வகுப்பும் திகைத்து திரும்பியது.

குன்றிய உடலும் கன்னிய முகமுமாய் எழுந்தனர்.
“நடங்கடா...” என்று பிடரியை பிடித்து நெட்டித் தள்ளினார். தலைமையாசிரியர் அறையை நோக்கி நடக்கும்போது, கனக விசயரின் தலையில் கல் ஏற்றி கண்ணகிக்குச் சிலை எடுக்க நடந்த சேரன் செங்குட்டுவன் அவர் உடம்பில் புகுந்திருந்தான்.

“என்ன நினைச்சிக்கிட்டிருக்கானுகோ? தமிழ் வாத்தியாருண்ணா எல்லா பயலுவலுக்கும் இளக்காரமாப் போச்சு. இந்த சோலியை கணக்கு வகுப்பிலே செய்வானா? இல்லே அறிவியல் வகுப்பிலே செய்வானா? நாமென்ன கூளப்ப நாயக்கன் காதலா நடத்துகோம்? வாலி வதைப்படலம்ணா எவ்வளவு உயிரான படலம்? அண்ணைக்கு வகுப்புலே சத்தம் கூடுதலா கேட்டுண்ணுட்டு என்னமெல்லாம் பேசினாரு? வகுப்பெடுக்கேரா, மந்தையிலே மாடு மறிக்கேராண்ணுட்டு! அதும் பயக்க முன்னால வச்சு ! மயிரா மதிப்பானுகோ? இளைச்சவன் பெண்டாட்டிண்ணா எல்லாருக்கும் மயினி...”

கையில் ஒற்றை சிலம்பு இருந்தால்கூட பொருட்படுத்தாத வாயிலோன் அன்று தமிழய்யாவின் வேகம் கண்டு திகைத்து, தடையேதும் சொல்லாமல் ஒதுங்கி நின்று ஒட்டுக் கேட்க ஆயத்தமானான்.

தலைமையாசிரியருக்கு ஊருக்குப் போகும் அவசரம். சற்று நேரத்துடன் போனால் நெரிசல் இல்லாமல் வண்டி பிடிக்கலாம். வெள்ளிக்கிழமை என்றால் மூன்று மணிக்கு எழுந்து விடுவார். எதற்கும் இருக்கட்டும் என்று அவசர வேலையாக வெளியே போவதற்கான சிறுகுறிப்பு மேசைமேல் இருக்கும். யாராவது அதிரடி சோதனை வந்தால் காட்ட. பயன்படவில்லை என்றால் திங்கட்கிழமை கிழித்துப் போட்டு விடலாம். பெரும்பாலும் விடுப்புகளுக்கு இதே சூத்திரம்தான். தலைமையாசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஏகமனம் இருந்தால் விடுப்பு என்பது ஆதிரை கையின் மாயக்கலம்.

தமிழய்யா, அனுமதி பெறாமலும், கதவைத் தட்டாமலும் சின்னச் சூறாவளி போல் நுழைந்த வேகம் தலைமையாசிரியருக்கு எரிச்சல் தந்தது, மனதின் கறுவலில் உயர் ஜாதி மனோபாவம் ஒளிந்திருந்தது.

இவனுகளுக்கெல்லாம் தான் இனி காலம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ். இப்பம் வீட்டுக்கு போற நேரத்திலே என்ன சனியனைக் கொண்டுக்கிட்டு வாறானோ?, என எண்ணி, சற்றுத் தோரணையாக, “என்ன பிரச்சனை?” என்றார்.

“ஐயா, இவனுக மூணு பேரும் வகுப்பு நடந்துக்கிட்டிருக்கும்போது என்ன செய்தானுகோ தெரியுமா?”

“சொன்னாத் தானேவே தெரியும்? நான் சொப்பனமா கண்டேன்?”

“ஐயா, இவனுக மூணு பேரு .....”

“இவனுக மூணு பேரு தான். என்ன செய்தான் சொல்லும்?”

“கடைசி டெஸ்க்கிலே குனிஞ்சு கெடந்து, கையிலே... கையிலே...”

“கையிலே என்னவே கையிலே? சாமனமா?”

“அதான் சார்... புடிச்சு ஆட்டிக்கிட்டு இருக்கானுவோ !”
தலைமையாசிரியருக்கு இரத்தம் தலைக்கேறித் ‘தறதற’ வெனத் திளைத்தது. ஆசிரியாராக இருபத்தியோரு ஆண்டுகள், தலைமையாசிரியராக ஒன்பது ஆண்டுகள். எத்தனையோ பார்த்தாயிற்று!

எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளுடன் காதல் கடிதங்கள்.

பென்சில் பெட்டி முதல் பணப்பை வரை திருட்டு.

ஆசிரியர் மீது மை தெளிப்பு.

மாணவியர் சிற்றுண்டியைத் திருடித் தின்பது.

தேர்வுகளின் காப்பி அடித்தல்.

வகுப்பு வேளைகளில் சுவரேறிக் குதித்தல்.

மூத்திரப் புரைகளில் சிற்றின்பக் குறியீட்டுப் படங்கள் வரைதல்.

சைக்கிள் டயரில் ஆணி குத்துதல்.

வகுப்பறையிலேயே சிகரெட் பிடித்தது.

பாலுறவு படங்கள் போட்ட புத்தகங்கள் படிப்பது.

ஆசிரியர் வீட்டுக் கூரையில் கல்லெறிதல்.

கோவில் மதிலின் மறுபுறம் நின்று பிரகாரம் சுற்றும் ஆசிரியரின் பட்டப்பெயர் கூவுதல்.

காப்பிக்கடையில் கடனுக்கு வாங்கித்தின்று திரும்பத் தராதிருத்தல்.

முன்னேற்ற அட்டையில் தந்தையின் கையெழுத்தைத் தானே இடுதல்.

பெற்றோரைக் கூட்டி வரச் சொன்னால் வாடகைக்கு ஆட்கள் பிடித்து வருதல்.

வகுப்புக்கு வராமல் சினிமாவுக்கு போவது.

கள், சாராயம், அரிஷ்டம், கஞ்சா குடிப்பது.

கோயில் உண்டியலில் காசு எடுப்பது.

மாணவர் செய்யும் சிறிய பெரிய குற்றங்களையும் தண்டனைகளையும் பட்டியிலிட்டால் இந்தியன் பீனல் கோடு அளவுக்குப் போகும். அவற்றுக்கு சற்றும் குறையாத, ஆனால் வெளியே தெரியாத ஆசிரியக் குற்றங்கள்.

என்றாலும் இதுபோல் ஓரிழிவைச் சந்தித்ததில்லை எனத் தோன்றியது.

தலைமையாசிரியர்களுக்கென்றே நாட்டில் பிரப்பங்கொடிகள் தழைக்கின்றன. மேலும் அன்று அவர் சபாரி சூட் அணியும் சிறப்பான தினமும் இல்லை. கை தூக்கி பிரம்பு வீசுவது வசதி குறைவாக இல்லை.

‘விஷ் விஷ்’ என்று காற்றை கிழிக்கும் ஓசை. கைமாற்றக் கூட அனுமதிக்கவில்லை. கன்னி சிவக்கும் கையைத் தடவியவாறு அடுத்த அடிக்குக் கை நீட்டி.... முதலில் கை நீட்டியவனுக்கு ஆறு பிரம்படிகள் என்றால் மூன்றாவது நின்றவன் எல்லா அடிகளையும் எண்ணி எண்ணி மனதில் வாங்கிக் கொண்டு நின்றான்.

“திங்கட்கிழமை அப்பாவைக் கூட்டீட்டு வந்து என்னை பாத்த பொறவு வகுப்புக்கு போனா போரும். மக்கமாருக்கு யோக்கியதையை அப்பம்மாரும் அறியட்டும்.”

பிரம்படிகள் ஒன்றும் புதியன அல்ல பள்ளிகளில். ஆனால் ‘கூ’ வெனப் பள்ளி வளாகமெங்கும் செய்தி பரந்து கிளைத்தது. இப்படியொரு பாதகத்தை இப்போதுதான் முதன் முதலில் கேள்விப்படுவதான ஆசிரியை முகபாவனைகள், சன்னஞ்சன்னமாக விவரிப்புக் கேட்டு இறுதியில் மிகையான நாண முக வலிப்புகள்.

இனி இதைக் கொண்டுபோய் வீட்டில் விளம்ப வேண்டும். அடிபட்டுக் கனத்துச் சிவந்த வலி தெறித்தது. மனது கையை விடவும் கன்றிப் போயிருந்தது,

இன்று, இனிமேல், உயிர் கொல்லும் அம்பு துளைத்த வலியில் இருந்த வாலிக்கு நற்கதி இல்லை எனும் நினைப்புடன் வகுப்பு நோக்கி நடந்தார் தமிழய்யா.
        ***

    காலை வகுப்புகள் தொடங்கி நாள் நடந்து கொண்டிருந்த்து. மூன்று தகப்பன்மாரும் காலை ஒன்பதரைக்கே வந்துவிட்டனர். என்றாலும் உடனே விளித்து விசாரிப்பதும் அறிவுறுத்துவதும் அதிகார தர்மத்துக்கு முரணானது என்பதால் ஒரு மணி நேரமாக நெளிந்து கொண்டு நின்றிருந்தனர்.

    மூன்று மாணவரும் சற்று விலகி, தமக்குள் உரையாடக்கூட வகையற்று, மரத்தைப் பார்ப்பதும் நிழலைப் பார்ப்பதும் பறக்கும் காகங்களைப் பார்ப்பதும் நடமாடும் முகங்களைத் தவிர்ப்பதுமாப் பயின்று கொண்டிருந்தனர். வன்மமும் இளக்காரமும் அனுதாபமுமாய் புறச் சாயைகள் அவர்கள் மேல் மாறி மாறி விழுந்துவாறு இருந்தன.

    நகராட்சிப் பள்ளிக்கு பையன்களை அனுப்புபவர்கள் வங்கி ஊழியராகவோ, பொறியியல் வல்லுனர்களாகவோ, வருவாய்த்துறை வணிகவரித்துறை ஊழியர்களாகவோ, ஆசிரியர்களாகவோ இருப்பதில்லை. நகரில் துணிக்கடையில் வேலை செய்யும் ஒருவர் அனுமதியில் வந்திருந்தார். இன்னொருவர் சுவருக்கு வெள்ளையடிப்பவர், அன்று வேலை ஏதுமில்லை. மூன்றாமவர் நகராட்சிச் சந்தையில் சுமடு தூக்குபவர். காலையில் சந்தைக்குப் போய் வாழைக்குலைகள், வாழையிலைக்கட்டுகள், தேங்காய் மூடைகள், சேனை, வெள்ளரி, இளவன், பூசணி மூடைகள் என ஒரு தத்தி இறக்கிப் போட்டுவிட்டு, சாக்கைக் குத்தித் தூக்கும் கொக்கியை இடுப்பில் செருகியவாறு, தலை முண்டு அவிழ்த்து பாயும் வியர்வையைத் துடைத்து, பாரம் சுமந்து உச்சி மண்டையின் மயிரெல்லாம் பறிபோன மீதி மயிரைக் கையினால் கோதி, ஒரு பீடி பற்ற வைத்துவிட்டு வந்து நின்றார்.

    தமிழய்யாவை அழைத்து வர ஆள் போயிற்று. அன்றைய விசாரணயின் முக்கியத்துவமும் தனது பங்கும் உணர்ந்த அவர், தன்னிடம் இருந்த ஒரேயொரு தவிட்டு நிற சஃபாரி சூட் அணிந்து வந்திருந்தார். நெற்றியில் இருந்த திருநீற்றுக்கோடும் சந்தனக்குறியும் குங்குமப்பொட்டும் வெகு பொருத்தமாய் இருந்த்து.

    தமிழய்யா சென்று நாற்காலியில் கம்பீரமாய் உட்கார்ந்த் பிறகு, இறை முறை பிழையாத வாயிலோன், பெற்றோர்களையும் மாணவர்களையும் கூப்பிடப் போனான்.
  
அறுவர் முகத்திலும் இரத்தம் வற்றிக் கிடந்தது. தலைமையாசிரியரும் தமிழய்யாவும் இரட்டை நாயனங்கள் போல ஜனரஞ்சக ராகங்களில் மாறி மாறிப் பொழிந்துகொண்டிருந்தனர்.

    “இப்பிடியாவே பிள்ளை வளக்கது? பள்ளிக்கூடத்து மானமே போச்சு.... அவ்வளவு அவசரம்ணா சீக்கிரமே பொண்ணு கெட்டி வைக்க வேண்டியது தானே! இவனுகளை பாத்து மத்த பயக்களுமில்லா கெட்டுப் போவானுக! நிக்கானுக பாருங்க கல்லுளிமங்கள் மாதிரி. பத்து நாள் சஸ்பெண்ட் செய்தாத்தான் சரியாகும்.....”

    தழைந்த குரலில் ஒரு தகப்பனார் சொன்னார்.

    “தப்புதாங்க... நாங்களும் கண்டிச்சாச்சு.. இனிமேல் இப்பிடி நடக்காது... இந்த தடவி மன்னிச்சு விட்டுருங்க.. சின்ன பயக்கோ.... அறிவு கெட்டத்தனமா செய்திட்டானுக....”

    “ஆமாங்க....... இந்த ஒரு தடவை....” இரண்டாவது தகப்பனார்.

மூன்றாவது தகப்பனாரைப் பார்த்துத் தலைமையாசிரியர் கேட்டார்.

“ஒமக்கென்னவே? வாயிலே நாகரம்மன் கோவில் பிரசாதமா கெடக்கு? கட்ட மண்ணு மாதிரில்ல நிக்கேரு?”

தெரியாம செய்திட்டான்யா.. பெரிய மனசு பண்ணி........”

“என்னவே தெரியாம? கலியாணம் கழிச்சு வச்சா, அடுத்த வருசம் ஒம்மைத் தாத்தா ஆக்கீருவான். பிள்ளைகளை ஒழுங்கா வளக்கணும்வே. இது சந்தை கெடையாது, பள்ளிக்கூடமாக்கும். பள்ளிக்கூடம்ணா கோயிலு மாதிரிவே... நீரு பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கேரா? பள்ளிக்கூடத்துக்கெல்லாம் போயிருந்தா என்னத்துக்கு சந்தையிலே செமடு தூக்கேரு?”

“ஐயா, நீங்க சொல்லுகது எல்லாம் சரி தான். தப்புத்தான். கால்லே விழுந்து மன்னிப்புக் கேக்கேன். நேத்தே வீட்டிலே நல்ல வெள்ளாவி வச்சேன். இனிமே செய்ய மாட்டான். இந்த முறை விட்டிருங்கோ........”

“என்னவே ரெம்ப லேசா சொல்லீட்டீரு!”

“பின்னே என்ன செய்ய சொல்லுகியோ? பையனை வெசம் வச்சுக் கொண்ணு போட்டிரட்டா... தப்புத்தான். பள்ளிக்கூடத்திலே செய்யக் கூடிய காரியம் இல்லேதான். ஆன உலகத்திலே அதைச் செய்யாத ஆம்பிளை உண்டாய்யா? பள்ளிக்கூடத்திலே செய்திட்டான். சவம் சின்னப் பயக்கோ புத்தியில்லே... கொழுப்பு... தப்பாகிப்போச்சு. அந்தால காதும் காதும் வச்சாப்பிலே கூப்பிட்டுக் கண்டிசு புத்தி சொல்லி அனுப்புவேளா? அதை விட்டுப் போட்டு பள்ளிக்கூடம் பூரா நாற அடிச்சி, ஊரெல்லாம் கேவலபடுத்தி, புள்ளைகளைத் தண்டிக்கலாம்யா! அவமானப் படுத்தலாமா? இனி இந்த பயக்கோ மத்த பிள்ளையொ முகத்திலே, வாத்தியமாரு முகத்திலே எப்பிடி முழிக்கும்? உமக்கு ஆம்பிளைப்பிள்ளை இருக்காய்யா? உம்ம மகன் இந்த வேலைய செய்யச்சிலே நீரு பாத்துட்டா என் செய்வேரு? போலீஸ்டேஷன்லே போயி பராதி கொடுப்பேரா? முச்சந்தியிலே தட்டி எழுதி வைப்பேரா? உம்ம மாதிரி ஆளுக்கிட்டே படிச்சா பிள்ளையோ இப்படித்தான்யா நடக்கும்! இதைவிட சுமடு தூக்கியோ செங்கல் சுமந்தோ பொழைக்கலாம்.... வாலே மக்கா போகலாம்.... பள்ளிக்கூடம் நடத்துகானுகோ பள்ளிக்கூடம்... இதுக்கு கசாப்புக் கடை நடத்தலாம்.... நாறத்தேவடியா .... மவனுகோ....”
எப்படியும் கைகலப்பு ஏற்படும் என ஓடி உதவிக்குப் போகும் தயார் நிலையில் நின்ற வாயிலோனுக்கு ஏமாற்றமாக இருந்த்து.


நாஞ்சில்நாடன், இந்தியா டுடே, ஏப்ரல் 2000