Monday, 7 October 2013

திராவிட், கங்குலி - மறைய மறுத்த நட்சத்திரங்கள்

ஜுன் 20, 1996 இங்கிலாந்தில் முன் கோடைகாலம், கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்பெறும் லார்ட்ஸ் மைதானம், இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப் பயணம். அன்றைய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் என்பது வெற்று சம்பிரதாயம். கடைசியாக துணைக்கண்டத்திற்கு வெளியே எப்பொழுது டெஸ்ட் போட்டியில் வென்றோம் என்ற நினைவுக் கூட இருந்திருக்காது அணியினருக்கும், நிர்வாகத்திற்கும். ஒன்றிரண்டு ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெறுவதோடு சரி. இளம் திறமையாளனாக, அதிரடி நாயகனாக வளைய வந்துக் கொண்டிருந்த சச்சின் தெண்டுல்கர், ஒரு ஆளுமையாக முதிரத் துவங்கியிருந்த பருவம். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் மரண அடியை வாங்கிக் கொண்டு தோற்பர். சில போட்டிகளில் தெண்டுல்கரோ, அசாருதீனோ கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல சில ஆறுதல் சதங்களை அடிப்பர். டிராவோ, போராடித் தோற்பதென்பதோ கூட மேற்கூறிய வெகு சில தருணங்களில் மட்டுமே நடக்கும். மற்ற இந்திய மட்டையாளர்களுக்கு பந்து காற்றில் ஸ்விங்க் ஆகக் கூடாது, ஆடுதளத்தில் விழந்த பிறகு சீம் ஆகக் கூடாது, இடுப்புக்கு மேலே உயர எழும்பக் கூடாது, மீறி இதிலொன்று நடந்துவிட்டால் கோபமுற்று(!!) அவுட் ஆகி விடுவார்கள். இங்கிலாந்தில் கோடை காலத்தின் முற்பகுதியில் நிலவும் குறைந்த வெப்பனிலை துணைக்கண்டத்திலிருந்து செல்லும் அணிகளால் பொறுத்தக் கொள்ள இயலாத அளவுக்கு, முதுகு நாணும், கை கால் விரல்களும் சில்லிட்டு விரைத்து கொள்ளும் அளவுக்கு இருக்கும். இந்த தட்ப வெப்பத்தில், போதாத குறைக்கு மித வேக பந்துவீச்சாளர்களின் பந்துகள் வேறு காற்றில் இருபது டிகிரியும், ஆடுதரையில் விழுந்த பிறகு நாற்பது டிகிரியும் இட வலமாகவும், வல இடமாகவும் மாறி மாறி நகரும்.  இது போதாதா தோற்பதற்கானக் காரணமாகக் கூற? இந்த சுற்றுப் பயணமும் ஜூன்20 வரை எந்த அரிய மாற்றத்தையும் கண்டுவிடவில்லை. 2-0 என்ற கணக்கில் ஒரு-நாள் தொடரை இழந்தாகிவிட்டது, பிர்மிங்கமில் ஆடிய முதல் டெஸ்ட்டையும் இழந்தாகி விட்டது. எவ்வளவு பெரிய தோல்விகளை சந்தித்தாலும் இந்திய அணியின் ஆடும் பதினொன்றில் மாற்றங்கள் சாதரணமாக கொண்டுவரப்படுவதில்லை என்பது இன்றுவரை தொடரும் வரலாற்று உண்மை. ஆனால் தொடர் தோல்விகளை சந்திக்கும் போது அணிகளுக்குள் சர்ச்சைகள் எழுவது வழக்கம். இந்த முறை சித்துவுக்கும் அசாருதீனுக்கும் ஏழாம் பொருத்தமாகிப் போனது. முட்டிக் கொண்டனர். சித்து பாதியிலே தாய்நாடு திரும்பிவிட்டார். சஞ்ஜெய் மஞ்சரேக்கருக்கு கணுக்காலில் காயம். இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே அன்று இரு இளம் வீர்ர்களுக்கு இரண்டாவது டெஸ்டில் வாய்ப்பளிக்கப்பட்டது. உண்மையில் அணி நிர்வாகம் அவர்களின் திறமையை உணர்ந்தெல்லாம் வாய்ப்பளிக்கவில்லை. முதல் இன்னிங்க்ஸில் 344 ஓட்டங்களுக்கு அனைத்து வீரர்களையும் இழந்தது இங்கிலாந்து. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 25/1, இந்தியாவை ஃபாலோ ஆன் ஆக்கக் கூட இந்த 344 போதும் என்று நினைத்திருப்பர். சவுரவ் சாந்திதாஸ் கங்குலி, ராகுல் சரத் திராவிட் என்ற இரு புதிய இளைஞர்கள் அன்று அதற்கு குறுக்கே நின்றனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டுகள் டிராவில் முடிந்தன. கங்குலி 131,136 என இரண்டு டெஸ்டுகளிலும் இரு சதங்களை அடித்தார். திராவிட்டின் பங்கு 95, 84. துணையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த சச்சினுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ள, மூன்றாவது டெஸ்டில் 177 ரன்களை குவித்தார். இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமுறை தலையெடுத்தது. அச்சமயத்தில் அதை எத்தனை பேர் உணர்ந்திருந்தனர் என்று தெரியவில்லை, இவ்விளைஞர்கள் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த அணித் தலைவராகவும், உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த மூன்றாம் எண் மட்டையாளர்களில் ஒருவராகவும் உருவாகத் தொடங்கிவிட்டனர் என்று.
 
காலம் மாற்றத்தைக் கொணர்ந்தது. மூன்று வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருவரும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு அணிப் போராடத் தொடங்கியிருந்தது. உபயம் வலுவான மட்டைவீச்சு வரிசை மற்றும் ஸ்ரீநாத். 1999 – 2000ல் ஒரு பெரும்புயல். முன் கூட்டியே ஆட்ட முடிவுகளை தீர்மானித்தல், சூதாட்டச் சர்ச்சை உலக கிரிக்கெட்டை உலுக்க, அசாருதீனுக்கு தடை விதிக்கப் பட, சச்சின் தலைமையில் தொடர் தோல்விகள், அவரின் மட்டை வீச்சிலும் கவனச் சிதறல். சச்சின் தலைமையை ஏற்க மறுக்க, 2000ஆம் ஆண்டு பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவின் இந்திய பயணத்தில் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு கங்குலி தலைமை வகித்தார். முதல் தொடரிலேயே 3-2 என வெற்றி. சூதாட்ட சர்ச்சை, வெளியிலிருந்து ஏகப்பட்ட விமர்சனங்கள் கடினமான காலகட்டம். அவ்வருடமே நடந்த ஐசிசி நாக்-அவுட் தொடருக்கு ஒரு மூவர் கூட்டணி அமைந்தது, டால்மியா – ஜான் ரைட் – கங்குலி. அணிக்கு இளரத்தம் பாய்ச்ச முடிவு செய்து யுவராஜ் சிங், ஜாகீர் கான் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றது அணி. சிறிது கால இடைவெளியிலேயே முகமது கைஃப், சேவாக், ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர், இர்ஃபான் பதான், சுரேஷ் ராய்னா போன்றோரையும் கங்குலி தான் அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் அதுவரை பெருநகர, மேட்டுக்குடி இளைஞர்கள் மட்டும் பெரும்பான்மையாக இருந்த தேசிய அணியில் சிறுநகர மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் திறமையின் அடிப்படையில் நுழைய வழிவகுத்தார். இளம் வீரர்களுக்கு கங்குலி போராளிக் குழுத் தலைவனைப் போல விளங்கினார். சாகசப் பயணம் தொடங்கியது. இதற்குள் திராவிட் மட்டை வீச்சு நுட்ப ரீதியாக சச்சினுக்கு அடுத்த நிலையில் அணியில் தான் இருக்கப் போவதை உறுதி செய்திருந்தார். 1997 தென்னாப்பிரிக்க பயணமும், 1999 நியூசிலாந்து பயணமும் இதற்கு சான்றுகள். அணியின் மட்டை வரிசை தெண்டுல்கர் திராவிட் மற்றும் கங்குலியை சுற்றி அமைந்தது. வீரேந்தர் சேவாக், விவிஎஸ் லக்ஷ்மண் சேர்ந்து கொள்ள, அசைக்க முடியாத மட்டைவீச்சு  கூட்டணி உருவாகியது. பந்து வீச்சு தாக்குதலுக்கு, இளம் வேக வீச்சாளர்களும், ஸ்ரீநாத்தும், கும்ப்ளேவும். கங்குலியும், ஜான் ரைட்டும் இணைந்து வெளிநாட்டு டெஸ்ட்டுகளில் வெற்றி பெறத் தேவையான அனைத்து அம்சங்களையும் உருவாக்கினர். ஐந்து வருடங்களில் அபாரமான முன்னேற்றம். துணைக்கண்ட ஆடுதளங்களில் 90 சதவிகத வெற்றி,  கணிசமான அளவில் வெளிநாட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் வெற்றிகள், உலகக் கோப்பை இறுதி வரை சென்றனர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை சமன் செய்தது என தொடர்ந்தது வெற்றிப் பயணம். அனைத்திலும் பெரும்பங்கு வகித்தார் ராகுல் திராவிட். டெஸ்ட் போட்டிகளில் அந்த காலகட்டத்தில் உலகின் மிகச் சிறந்த மட்டையாளரகவும், ஒரு நாள் போட்டிகளுக்கு இவரது ஆட்டமுறை சரிவராது என விமர்சித்தவர்களை தலைகுனிய செய்யும் விதத்திலும் ஆடி சாதித்து கொண்டிருந்தார். ஜோகன்ஸ்பர்கில் 148, ஹேமில்டனில் 190, கொல்கத்தாவில் 180, அடிலெய்டில் 233, ஹெடிங்க்லீயில் 148, ஓவலில் 217, ஜார்ஜ் டவுனில் 144, லாகூரில் 270 என உலகம் முழுவதையும் வென்றிருந்தார். 2004ல் சிட்டகாங்கில் அடித்த சதத்தின் மூலம் உலகின் அனைத்து டெஸ்ட் ஆடும் நாடுகளிலும் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்தார். அணிக்கு மற்ற நாடுகளைப் போல ஆல்ரவுண்டர்களோ, மட்டை வீச்சில் திறன் வாய்ந்த விக்கெட் கீப்பர்களோ கிடைக்காத போது, அணி நிர்வாகம் விக்கெட் கீப்பராக்க திராவிடை அணுகிய போது, மறுக்காமல் அதை ஏற்றார். அதன் மூலம் ஒரு பந்து வீச்சாளரையோ, மட்டை வீச்சாளரையோ அணியில் அதிகமாக சேர்க்க முடிந்தது. மட்டை வரிசையில் ஐந்தாம் வீரராக களம் கண்டு பல ஒரு நாள் போட்டிகளை வெல்ல உதவினார். கங்குலி ஒரு நாள் போட்டிகளில் சதங்களாக நொறுக்கிக் கொண்டிருந்தார். தெண்டுல்கரும் அவரும் சேர்ந்து உலகின் வெற்றிகரமான ஒரு-நாள் போட்டி துவக்க ஜோடியாக விளங்கினர்.2003 உலகக்கோப்பை இறுதிக்கு சென்றது கங்குலியின் உச்சம் எனில், 2004ல் கங்குலியின் சரிவு துவங்கியது. ஜான் ரைட்டும் கங்குலியும் வைத்த மரம் பூத்து குலுங்கி, காய் காய்த்து பலனளித்துக் கொண்டிருந்த வேளை அது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டுக்கான ஆடுதளம் பயணம் வந்த அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது எனக் குறை கூறி கடைசி நேரத்தில் ஆடும் பதினொன்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். டால்மியாவின் பதவிக் காலம் முடிந்தது. ஜான் ரைட்டுடன் சிறிய கருத்து வேறுபாடு, தானே பரிந்துரை செய்து பயிற்சியாளராக்கிய கிரெக் சேப்பலுடன் பெரிய மோதல், கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு இழப்பு, மட்டை வீச்சில், ஓட்டக் குவிப்பில் வீழ்ச்சியென சுழற்றி அடிக்க தொடங்கியது. 2005 செப்டெம்பரில் கங்குலி அணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு திராவிட் நியமிக்கபட்டார். தொடர்ந்த சில மாதங்களில் பாகிஸ்தான் சுற்றுபயணம் முடிந்த பிறகு அணியிலிருந்தும் நீக்கபடுகிறார். கங்குலியும் ஜான்ரைட்டும் வைத்த மரங்கள் கனி கொடுக்க துவங்கியிருந்தன. திராவிட் தலைமையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை நீண்ட காலங்களுக்குப் பிறகு வென்றது. இதுவும் கங்குலி அணிக்கு திரும்புவார் என்று நம்பியவர்களின் நம்பிக்கைகளைக் குறைத்தது.

2006 திசம்பர், தென்னாப்பிரிக்காவில் இந்தியா உதை வாங்கும் என கணிக்கப்பட்டிருந்தது. கங்குலி அணிக்கு திரும்ப அழைக்கப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் ஆட உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உறுதியில்லாதவர் என கோரமாக புறக்கணிக்கப்பட்ட அதே கங்குலி. அவரின் மட்டைவீச்சு நுட்ப பலவீனங்களை எளிதாக பந்துவீச்சாளர்கள் சுரண்டி வெளியேற்றிவிடுவார்கள், பவுன்சர்களை சமாளிக்கத் தெரியாது என நிராகரிக்கப்பட்ட அதே கங்குலி. பந்துகள் வேகமாக எகிறி வரும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவர் பெற்ற ஓட்டங்கள் 51, 25, 0, 26, 66, 46 (இது இரு அணிகளாலும் குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட டெஸ்ட் தொடராகும்). அதைத் தொடர்ந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8, 48, 102, 46, 239, 91 என மொத்தம் 534 ஓட்டங்களை குவித்து சாதித்தார். பின்னர் ஆடிய முக்கியத் தொடர்களில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் 34, 40, 79, 1*, 37, 57,  ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அவர் பெற்ற எண்ணிக்கைகள் 43, 40, 67, 51, 9, 0, 7, 18, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் 24, 0, 87, 87, 13*, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் 47, 26*, 102, 27, 5, 32*, 85, 0. டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டப் பிறகு 10 அரை சதங்கள், ஒரு இரட்டை சதம் உட்பட 3 சதங்கள், 8 முறை நாற்பதுகளில் வெளியேறியது என பல முக்கிய சமயங்களில் வலுவான ரன்களை பெற்று அணிக்கு உறுதி சேர்த்தார். தனது ரசிகர்களால் “ஃபீனிக்ஸ்” என வருணிக்கப்படுவது பொய்யல்ல என்பதை நிருபித்த கங்குலி, ஆஸ்திரேலியத் தொடருடன் ஓய்வை அறிவித்தார். முன்னதாக 2007ல் பாகிஸ்தானுடனான தொடருடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டிருந்தார். இந்தியக் கிரிக்கெட் பெற்றெடுத்த மிகச் சிறந்த அணித் தலைவரின், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த டெஸ்ட் அணியை செதுக்கிய சிற்பிகளில் முக்கியமானவரின், சச்சினுக்கு அடுத்து இந்தியாவின் மிகச் சிறந்த ஒரு நாள் போட்டிகளின் மட்டையாளரின் கிரிக்கெட் வாழ்வு முற்றுபெற்றது. திராவிட்டின் வெற்றிகள் தொடர்ந்துக் கொண்டிருந்த நிலையில் தோனியின் தலைமையில் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் 4-0 என ஒயிட்-வாஷ் செய்யப்பட்டது. இங்கிலாந்துத் தொடரில் அட்டகாசமாக ஆடித் தனிமனிதனாக இங்கிலாந்தை சிறிதேனும் கலங்கடித்த திராவிட், ஆஸ்திரேலியத் தொடருடன் ஓய்வை அறிவித்தார். முன்னரே 2011 இங்கிலாந்துத் தொடருடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப் பெற்றிருந்தார். சொந்த மண்ணில் இங்கிலாந்தில் மறுபடியும் 2-1 என்ற கணக்கில் உதை வாங்கியது இந்தியா. பரவாயில்லை என்றார் தோனி, ஒரு நாள் போட்டிகளும், ஐபிஎல்லும் போதுமே டெஸ்ட்களே இல்லாமல் ஆக்கிவிட்டால் என்னவென்று எண்ணினார் சீனி. ஓம்  என்றுரைத்தன கிரிக்கெட் வாரியத்தின் விதிகள் , ஆம் ஆம் என்றுரைத்தனர் அவர்களது எடுபிடிகளும் முட்டாள் ரசிகர்களும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் இருண்ட காலமென்பது தொடங்கிவிட்டது அறியாமலோ, அல்லது அறிந்தும் 50 ஓவர், 20-ஓவர் போட்டிகளே ஆதர்சம் என அணித் தலைவரைப் போல் எண்ணியவர்களும்.

2013 ஐபிஎல் 20-20 காலக்கட்டம். இளைஞர்களுக்கான ஆட்ட வடிவம் இதுவென்று பல கிரிக்கெட் தெரிந்த/தெரியாத விமர்சகர்களும், ரசிகர்களும் பிதற்றி கொண்டிருந்த வேளையில் நடக்கிறது இது. கடந்த இரு தசாப்தங்களின் மிகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர், தனது வாழ்வின் முதல் ஆட்டத்தை ஆடும் முனைப்புடன் இளைஞனைப் போல களமிறங்குகிறார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வேளையில் இருந்த ஆர்வம், முனைப்பு, உடல் தகுதி (ஃபிட்னெஸ்), ரன் குவிக்கும் வேட்கை எதுவும் மறையவில்லை. ஆட்டம் துவங்குகிறது, முதல் பத்து நிமிடங்களுக்கு ஷாட்டுக்களை டைம் செய்ய முடியவில்லை. ரன் குவிப்பது கடினமாகத் தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஓட்டங்களை பெற முடிவு செய்து குறுகிய ஒற்றை ஓட்டங்களை போராடி பெறுகிறார். முன்பு போல பந்துகளின் அளவையும், உயரத்தையும் விரைவாக கணிக்க இயலவில்லை. கணித்தாலும் பந்துகளுக்கு வேகமாக எதிர்வினையாற்றும் திறனை உடலும், மூளையும் பெருமளவுக்கு இழந்துவிட்டது போல தோன்றுகிறது. தனது பழைய பிம்பங்களின் நிழலாக மட்டுமே தெரிகிறார். ஓய்ந்து விட்டார், போட்டி கிரிக்கெட் அற்ற ஒரு ஆண்டு ஆட்டத்திறனில் குறைவை ஏற்படுத்திவிட்டது என அனைவரும் முடிவுக்கு வருகிற சமயத்தில், காலத்தை பின்னோக்கி நகர வைக்கிறார் திராவிட். முதல் போட்டியிலேயே அரை சதம். ஆட்டத் தொடரில் வழக்கம் போல தொடர்ந்து அவசியமான நேரத்தில் முக்கிய ஓட்டங்களைக் கொடுக்கும் மட்டை வீச்சாளர்,  இளம் வீர்ர்களுக்கு பயிற்றுனர், மிகத் திறமையாக வழி நடத்தும் அணித் தலைவர், அணியின் நலனுக்காக மட்டை வரிசையில் தன் இடத்தை கீழிறக்கி இளம் அதிரடி வீர்ர்களுக்கு வாய்ப்பளிக்கும் அணி உணர்வு கொண்ட ஆட்டக்கார்ர், எதிரணி வியூகங்களை தகர்த்து மற்றும் அவர்களுக்கு எதிராக வியூகங்கள் வகுத்தல் மூலம் வெற்றிகளை குவித்தவர் என பல பரிமாணங்களில் இந்த தொடரில் மின்னினார். சூதாட்ட சர்ச்சைகளுக்கு இடையிலும் ராஜஸ்தான் அணியை அரையிறுதி வரை முன்னேற்றினார். தொடர்ந்து தற்போது அக்டோபரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீகிலும் இறுதிப் போட்டி வரை முன்னேற்றினார். தனது அணித் தலைவனைப் போல் போராடித் தான் இறுதிப் போட்டியில் தோற்றது ராஜஸ்தான் அணி. இத்தொடருடன் திராவிட் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து தன்னை விலக்கிக் கொள்கிறார்.


பொய்யாய் மாறிப் போயிருக்கும் இந்தியக் கிரிக்கெட்டில், நிஜ வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த ஒரு சகாப்தம் இத்துடன் முடிவு பெறுகிறது. இன்னும் ஒருவரே எஞ்சியிருக்கிறார் இந்தியாவில் மெய்யான கிரிக்கெட்டின் அஸ்தமனத்தை தற்காலிமாக தடுத்து நிறுத்தி கொண்டு, சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்.

7 comments:

 1. Very well written.... Ganguly and Dravid are the pillars of Modern Indian Cricket....

  ReplyDelete
 2. அருமையான அலசல்.. சூப்பர் நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்.. :-)

  ReplyDelete
 3. Everyone forget the things these great peoples done to the indian cricket :(

  ReplyDelete
 4. நல்ல பதிவு ஞானசேகர்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அருமையான காலக்கோடு! மிகத் துள்ளியமாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஶ்ரீநாத் தோள்பட்டைக் காயம் ஆன போது வேகப்பந்து வீச்சில் அணியை காத்தவர் வெங்கடேஷ் ப்ரசாத். அவரையும் மறைந்துவிடாதீர்கள். மேற்படி பதிவு அருமை. நல்ல கிரிக்கெட் வாசிப்பதற்கு சிறந்த தீனி🙏🏻

  ReplyDelete