Wednesday 10 April 2013

வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்

 மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் மதிய இடைவேளைக்குப் பிறகான முதல் வகுப்பு. தமிழ் ஐயா யாதொரு சுவாரசியமும் இன்றி, பல்லில்லாதவன் பரோட்டா தின்பது போல வாலி வதைப் படலம் நடத்தி கொண்டு இருந்தார். வாலி வதைப் படலத்தைக் கூட சுவாரசியம் இல்லாமல் நடத்தும் புலமையும் திறமையும் அவருக்கு இருந்தது. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஆசிரியர் முகத்தையே பார்க்காமல் ஆங்கில வழிப் பட்டப்படிப்பு. தொடரஞ்சல் வழி தமிழ் முதுகலைப் படிப்பு.

    வாலி இருந்தாலும் செத்தழிந்தாலும் ஒன்றுதான். மதிப்பெண்கள் நோக்கிய பாய்ச்சல். சீனிகிழங்குத் தின்ற பன்றி. ஏற்கனவே பணியில் இருந்ததால் அதிக மதிப்பெண்கள் வேண்டும் என்ற ஆசை கூட அற்றுப் போயிருந்தது. போராட்டு இல்லாத வாழ்வு. பட்டம் கிடைத்தால் மூன்று சம்பள உயர்வுகள். நூற்று முப்பத்தேழாவது சம்பள கமிஷன் எப்போது அமலுக்கு வரும், தேக்கத் தொகை எத்தனை கிடைக்கும், மூத்தமகள் நீள்கயற்கண்ணிக்கு இன்னும் பத்துப் பவுன் சேர்ப்போமா அல்லது குமரக்கோயிலாண்டி பைனான்சில் மூன்று வட்டிக்கு மேலும் ஐம்பதினாயிரம் போட்டு வைப்போமா, ஒரு செம்பு நிலவாய் இலவசமாக, மகள் கல்யாணமாகிப் போனால் பொங்கல்படி கொடுக்கத் தோதாக கிடைக்கும் – எனும் சிந்தனைகள் சிக்கெனப் பிடித்து ஆட்டி கொண்டிருந்தன.

    அன்று பிற்பகலில், பகல்-இரவு ஒரு நாள் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இருந்தது. மாணவர்கள் எப்போது மூன்றரை மணியாகும், வீட்டுக்குப் போய் தவசிருக்கலாம் என்ற பரபரப்பில் இருந்தனர். மேலும் எப்போது மின்வெட்டு இருக்கும், எப்போது திரும்ப வரும் என்பது மின்சார கடவுள்களுக்கே தெரியாத மாதங்கள். அது பற்றிய ஆழ்ந்த கவலை வேறு. நாற்பத்தெட்டு மாணவருக்கும் தமிழ் ஐயாவுக்கும் நாற்பத்தொன்பது வகையான சிந்தனைகள் என வகுப்பு குவி மையம் கொண்டிருந்தது.

    “பறித்த வாளியைப் பரு வலித் தடக்கையால் பற்றி” என்று வாசித்து நிறுத்தியவர், “சரம், பகழி, வாளி எல்லாமே ஒரே பொருள்தான். வாளி என்றால் பொருள் தெரியுமா? குமரேசன் சொல்லு” என்றார்.

“வாளிண்ணா கிணத்திலேருந்து தண்ணி கோரக்கூடிய சாதனம் ஐயா.”

“சீ, அலவலாதி நாயே ! வாளிண்ணா அம்புடா அம்பு. அன்பு இல்லே, அம்பு தெரிஞ்சிக்கோ. நீயெல்லாம் தமிழ் படிச்சு நாட்டை தலைகீழா நாட்டப் போறே ? ம்... “

வாலியை அந்த வகுப்பிலேயே கொன்று வீடுபேறு கொடுக்கும் உத்தேசம் இல்லை அவருக்கு. அது தவறாமல் பள்ளி இறுதித் தேர்வில் வரும் பகுதி. வராக அவதாரம் போல் சற்று ஆழமாகத் தோண்டித் தான் பார்க்க வேண்டும் செய்யுளை.

பக்கத்து அறை, ஒன்பது பி, பூகோள ஆசிரியர் மாணவருக்கு சிறு தேர்வு எழுத சொல்லி இருப்பார்போலும். வெளி வராந்தாவில் நின்று பல் குத்த ஈர்க்கு தேடிக் கொண்டிருந்தார். மத்தியானச் சாப்பாட்டில் முற்றல் சீனி அவரைக்காய் துவரன். பல்லிடுக்கில் புகுந்து கொண்டிருந்தது. தசரத இராமனின் அம்பு ஒன்று இரவல் கிடைத்தால் கூட நன்றாக இருக்கும். ஆனால் அவன் அம்பு ஒன்று வாலியிடம் சிக்கிக் கொண்டிருந்தது.

அம்பில் பொறித்திருந்த இராம நாமத்தை எழுத்துக் கூட்டிப் படிக்குமாறு வாலியை விட்டுவிட்டு தமிழ் ஐயாவும் வராந்தாவுக்கு வந்தார்.

“என்ன சார்வாள் ? சக்கை பிசின் காலேல இருந்தே சள்ளு சள்ளுண்ணு விழுகாரு ?”

சக்கைப் பிசின் என்பது தலைமை ஆசிரியரையே எப்போதும் ஒட்டிக் கொண்டு திரியும் கணித ஆசிரியரின் காரண இடுகுறிப்பெயர்.

“அவன் கெடக்கான். காலம்பற தினத்தந்தி பாத்தேரா ? குமரி சீட்டு கம்பெனி திவால். புள்ளிக்காரனுக்கு அதிலே அம்பதாயிரத்துக்கு சீட்டு ஒண்ணு உண்டும். இன்னும் புடிக்கலே. பதினேழு தவணை ஆயாச்சாம்.”

“ஓ, அதானே பாத்தேன். டியூசன் எடுத்து கொள்ளையடித்த காசு இப்படித்தான் போகும். வேய்.... பாவப்பட்ட பிள்ளைகள் கிட்டே கூட கழுத்தப் பிடிச்சு நெரிச்சு வாங்கீருவான்.... “

மாணவர்களை மேற்பார்க்க பூகோள ஆசிரியர் வகுப்பறைக்கு திரும்பியதால், வலி பொறுக்க முடியாமல் கிடந்த வாலியை காப்பாற்றும் பொருட்டு, தமிழ் ஐயா வகுப்பினுள் நுழைந்தார்.
சற்று சலசலப்பு அடங்கியது.

“மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரத்தை” என்று வாசித்து நிறுத்தி வகுப்பை நோட்டமிட்டார்.
கடைசி வரிசையில் மூன்று பேர் டெஸ்க் மேல் தலைசாய்த்துக் கிடந்தனர். அதற்குல் தூங்கிப் போய்விட்டார்களா என, உறக்கம் கலையாமல் கையும் களவுமாய்ப் பிடித்துவிட வேண்டும் என்று மெல்லடி வைத்துப் போனார்.

உறங்கிப் போனவர்களாய்த் தெரியவில்லை.

உடல்களில் விறைப்பும் துடிப்பும் இருந்தது. அவரவர் கைகள் அவரவர் குறிகளில்.

தமிழ் ஐயாவுக்கு அறம் சார்ந்து ஒழுக்கம் சார்ந்து இயங்கும் சகல் நரம்புகளும் புடைத்துத் துடித்தன.

“எழுந்திருங்கடா நாய்களா” என உரத்த குரலில் கூச்சலிட்டார். பதறிப் போய் எழுந்து நின்றனர். என்ன நடக்கிறது என்ற ஆவலில் வகுப்பும் திகைத்து திரும்பியது.

குன்றிய உடலும் கன்னிய முகமுமாய் எழுந்தனர்.
“நடங்கடா...” என்று பிடரியை பிடித்து நெட்டித் தள்ளினார். தலைமையாசிரியர் அறையை நோக்கி நடக்கும்போது, கனக விசயரின் தலையில் கல் ஏற்றி கண்ணகிக்குச் சிலை எடுக்க நடந்த சேரன் செங்குட்டுவன் அவர் உடம்பில் புகுந்திருந்தான்.

“என்ன நினைச்சிக்கிட்டிருக்கானுகோ? தமிழ் வாத்தியாருண்ணா எல்லா பயலுவலுக்கும் இளக்காரமாப் போச்சு. இந்த சோலியை கணக்கு வகுப்பிலே செய்வானா? இல்லே அறிவியல் வகுப்பிலே செய்வானா? நாமென்ன கூளப்ப நாயக்கன் காதலா நடத்துகோம்? வாலி வதைப்படலம்ணா எவ்வளவு உயிரான படலம்? அண்ணைக்கு வகுப்புலே சத்தம் கூடுதலா கேட்டுண்ணுட்டு என்னமெல்லாம் பேசினாரு? வகுப்பெடுக்கேரா, மந்தையிலே மாடு மறிக்கேராண்ணுட்டு! அதும் பயக்க முன்னால வச்சு ! மயிரா மதிப்பானுகோ? இளைச்சவன் பெண்டாட்டிண்ணா எல்லாருக்கும் மயினி...”

கையில் ஒற்றை சிலம்பு இருந்தால்கூட பொருட்படுத்தாத வாயிலோன் அன்று தமிழய்யாவின் வேகம் கண்டு திகைத்து, தடையேதும் சொல்லாமல் ஒதுங்கி நின்று ஒட்டுக் கேட்க ஆயத்தமானான்.

தலைமையாசிரியருக்கு ஊருக்குப் போகும் அவசரம். சற்று நேரத்துடன் போனால் நெரிசல் இல்லாமல் வண்டி பிடிக்கலாம். வெள்ளிக்கிழமை என்றால் மூன்று மணிக்கு எழுந்து விடுவார். எதற்கும் இருக்கட்டும் என்று அவசர வேலையாக வெளியே போவதற்கான சிறுகுறிப்பு மேசைமேல் இருக்கும். யாராவது அதிரடி சோதனை வந்தால் காட்ட. பயன்படவில்லை என்றால் திங்கட்கிழமை கிழித்துப் போட்டு விடலாம். பெரும்பாலும் விடுப்புகளுக்கு இதே சூத்திரம்தான். தலைமையாசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஏகமனம் இருந்தால் விடுப்பு என்பது ஆதிரை கையின் மாயக்கலம்.

தமிழய்யா, அனுமதி பெறாமலும், கதவைத் தட்டாமலும் சின்னச் சூறாவளி போல் நுழைந்த வேகம் தலைமையாசிரியருக்கு எரிச்சல் தந்தது, மனதின் கறுவலில் உயர் ஜாதி மனோபாவம் ஒளிந்திருந்தது.

இவனுகளுக்கெல்லாம் தான் இனி காலம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ். இப்பம் வீட்டுக்கு போற நேரத்திலே என்ன சனியனைக் கொண்டுக்கிட்டு வாறானோ?, என எண்ணி, சற்றுத் தோரணையாக, “என்ன பிரச்சனை?” என்றார்.

“ஐயா, இவனுக மூணு பேரும் வகுப்பு நடந்துக்கிட்டிருக்கும்போது என்ன செய்தானுகோ தெரியுமா?”

“சொன்னாத் தானேவே தெரியும்? நான் சொப்பனமா கண்டேன்?”

“ஐயா, இவனுக மூணு பேரு .....”

“இவனுக மூணு பேரு தான். என்ன செய்தான் சொல்லும்?”

“கடைசி டெஸ்க்கிலே குனிஞ்சு கெடந்து, கையிலே... கையிலே...”

“கையிலே என்னவே கையிலே? சாமனமா?”

“அதான் சார்... புடிச்சு ஆட்டிக்கிட்டு இருக்கானுவோ !”
தலைமையாசிரியருக்கு இரத்தம் தலைக்கேறித் ‘தறதற’ வெனத் திளைத்தது. ஆசிரியாராக இருபத்தியோரு ஆண்டுகள், தலைமையாசிரியராக ஒன்பது ஆண்டுகள். எத்தனையோ பார்த்தாயிற்று!

எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளுடன் காதல் கடிதங்கள்.

பென்சில் பெட்டி முதல் பணப்பை வரை திருட்டு.

ஆசிரியர் மீது மை தெளிப்பு.

மாணவியர் சிற்றுண்டியைத் திருடித் தின்பது.

தேர்வுகளின் காப்பி அடித்தல்.

வகுப்பு வேளைகளில் சுவரேறிக் குதித்தல்.

மூத்திரப் புரைகளில் சிற்றின்பக் குறியீட்டுப் படங்கள் வரைதல்.

சைக்கிள் டயரில் ஆணி குத்துதல்.

வகுப்பறையிலேயே சிகரெட் பிடித்தது.

பாலுறவு படங்கள் போட்ட புத்தகங்கள் படிப்பது.

ஆசிரியர் வீட்டுக் கூரையில் கல்லெறிதல்.

கோவில் மதிலின் மறுபுறம் நின்று பிரகாரம் சுற்றும் ஆசிரியரின் பட்டப்பெயர் கூவுதல்.

காப்பிக்கடையில் கடனுக்கு வாங்கித்தின்று திரும்பத் தராதிருத்தல்.

முன்னேற்ற அட்டையில் தந்தையின் கையெழுத்தைத் தானே இடுதல்.

பெற்றோரைக் கூட்டி வரச் சொன்னால் வாடகைக்கு ஆட்கள் பிடித்து வருதல்.

வகுப்புக்கு வராமல் சினிமாவுக்கு போவது.

கள், சாராயம், அரிஷ்டம், கஞ்சா குடிப்பது.

கோயில் உண்டியலில் காசு எடுப்பது.

மாணவர் செய்யும் சிறிய பெரிய குற்றங்களையும் தண்டனைகளையும் பட்டியிலிட்டால் இந்தியன் பீனல் கோடு அளவுக்குப் போகும். அவற்றுக்கு சற்றும் குறையாத, ஆனால் வெளியே தெரியாத ஆசிரியக் குற்றங்கள்.

என்றாலும் இதுபோல் ஓரிழிவைச் சந்தித்ததில்லை எனத் தோன்றியது.

தலைமையாசிரியர்களுக்கென்றே நாட்டில் பிரப்பங்கொடிகள் தழைக்கின்றன. மேலும் அன்று அவர் சபாரி சூட் அணியும் சிறப்பான தினமும் இல்லை. கை தூக்கி பிரம்பு வீசுவது வசதி குறைவாக இல்லை.

‘விஷ் விஷ்’ என்று காற்றை கிழிக்கும் ஓசை. கைமாற்றக் கூட அனுமதிக்கவில்லை. கன்னி சிவக்கும் கையைத் தடவியவாறு அடுத்த அடிக்குக் கை நீட்டி.... முதலில் கை நீட்டியவனுக்கு ஆறு பிரம்படிகள் என்றால் மூன்றாவது நின்றவன் எல்லா அடிகளையும் எண்ணி எண்ணி மனதில் வாங்கிக் கொண்டு நின்றான்.

“திங்கட்கிழமை அப்பாவைக் கூட்டீட்டு வந்து என்னை பாத்த பொறவு வகுப்புக்கு போனா போரும். மக்கமாருக்கு யோக்கியதையை அப்பம்மாரும் அறியட்டும்.”

பிரம்படிகள் ஒன்றும் புதியன அல்ல பள்ளிகளில். ஆனால் ‘கூ’ வெனப் பள்ளி வளாகமெங்கும் செய்தி பரந்து கிளைத்தது. இப்படியொரு பாதகத்தை இப்போதுதான் முதன் முதலில் கேள்விப்படுவதான ஆசிரியை முகபாவனைகள், சன்னஞ்சன்னமாக விவரிப்புக் கேட்டு இறுதியில் மிகையான நாண முக வலிப்புகள்.

இனி இதைக் கொண்டுபோய் வீட்டில் விளம்ப வேண்டும். அடிபட்டுக் கனத்துச் சிவந்த வலி தெறித்தது. மனது கையை விடவும் கன்றிப் போயிருந்தது,

இன்று, இனிமேல், உயிர் கொல்லும் அம்பு துளைத்த வலியில் இருந்த வாலிக்கு நற்கதி இல்லை எனும் நினைப்புடன் வகுப்பு நோக்கி நடந்தார் தமிழய்யா.
        ***

    காலை வகுப்புகள் தொடங்கி நாள் நடந்து கொண்டிருந்த்து. மூன்று தகப்பன்மாரும் காலை ஒன்பதரைக்கே வந்துவிட்டனர். என்றாலும் உடனே விளித்து விசாரிப்பதும் அறிவுறுத்துவதும் அதிகார தர்மத்துக்கு முரணானது என்பதால் ஒரு மணி நேரமாக நெளிந்து கொண்டு நின்றிருந்தனர்.

    மூன்று மாணவரும் சற்று விலகி, தமக்குள் உரையாடக்கூட வகையற்று, மரத்தைப் பார்ப்பதும் நிழலைப் பார்ப்பதும் பறக்கும் காகங்களைப் பார்ப்பதும் நடமாடும் முகங்களைத் தவிர்ப்பதுமாப் பயின்று கொண்டிருந்தனர். வன்மமும் இளக்காரமும் அனுதாபமுமாய் புறச் சாயைகள் அவர்கள் மேல் மாறி மாறி விழுந்துவாறு இருந்தன.

    நகராட்சிப் பள்ளிக்கு பையன்களை அனுப்புபவர்கள் வங்கி ஊழியராகவோ, பொறியியல் வல்லுனர்களாகவோ, வருவாய்த்துறை வணிகவரித்துறை ஊழியர்களாகவோ, ஆசிரியர்களாகவோ இருப்பதில்லை. நகரில் துணிக்கடையில் வேலை செய்யும் ஒருவர் அனுமதியில் வந்திருந்தார். இன்னொருவர் சுவருக்கு வெள்ளையடிப்பவர், அன்று வேலை ஏதுமில்லை. மூன்றாமவர் நகராட்சிச் சந்தையில் சுமடு தூக்குபவர். காலையில் சந்தைக்குப் போய் வாழைக்குலைகள், வாழையிலைக்கட்டுகள், தேங்காய் மூடைகள், சேனை, வெள்ளரி, இளவன், பூசணி மூடைகள் என ஒரு தத்தி இறக்கிப் போட்டுவிட்டு, சாக்கைக் குத்தித் தூக்கும் கொக்கியை இடுப்பில் செருகியவாறு, தலை முண்டு அவிழ்த்து பாயும் வியர்வையைத் துடைத்து, பாரம் சுமந்து உச்சி மண்டையின் மயிரெல்லாம் பறிபோன மீதி மயிரைக் கையினால் கோதி, ஒரு பீடி பற்ற வைத்துவிட்டு வந்து நின்றார்.

    தமிழய்யாவை அழைத்து வர ஆள் போயிற்று. அன்றைய விசாரணயின் முக்கியத்துவமும் தனது பங்கும் உணர்ந்த அவர், தன்னிடம் இருந்த ஒரேயொரு தவிட்டு நிற சஃபாரி சூட் அணிந்து வந்திருந்தார். நெற்றியில் இருந்த திருநீற்றுக்கோடும் சந்தனக்குறியும் குங்குமப்பொட்டும் வெகு பொருத்தமாய் இருந்த்து.

    தமிழய்யா சென்று நாற்காலியில் கம்பீரமாய் உட்கார்ந்த் பிறகு, இறை முறை பிழையாத வாயிலோன், பெற்றோர்களையும் மாணவர்களையும் கூப்பிடப் போனான்.
  
அறுவர் முகத்திலும் இரத்தம் வற்றிக் கிடந்தது. தலைமையாசிரியரும் தமிழய்யாவும் இரட்டை நாயனங்கள் போல ஜனரஞ்சக ராகங்களில் மாறி மாறிப் பொழிந்துகொண்டிருந்தனர்.

    “இப்பிடியாவே பிள்ளை வளக்கது? பள்ளிக்கூடத்து மானமே போச்சு.... அவ்வளவு அவசரம்ணா சீக்கிரமே பொண்ணு கெட்டி வைக்க வேண்டியது தானே! இவனுகளை பாத்து மத்த பயக்களுமில்லா கெட்டுப் போவானுக! நிக்கானுக பாருங்க கல்லுளிமங்கள் மாதிரி. பத்து நாள் சஸ்பெண்ட் செய்தாத்தான் சரியாகும்.....”

    தழைந்த குரலில் ஒரு தகப்பனார் சொன்னார்.

    “தப்புதாங்க... நாங்களும் கண்டிச்சாச்சு.. இனிமேல் இப்பிடி நடக்காது... இந்த தடவி மன்னிச்சு விட்டுருங்க.. சின்ன பயக்கோ.... அறிவு கெட்டத்தனமா செய்திட்டானுக....”

    “ஆமாங்க....... இந்த ஒரு தடவை....” இரண்டாவது தகப்பனார்.

மூன்றாவது தகப்பனாரைப் பார்த்துத் தலைமையாசிரியர் கேட்டார்.

“ஒமக்கென்னவே? வாயிலே நாகரம்மன் கோவில் பிரசாதமா கெடக்கு? கட்ட மண்ணு மாதிரில்ல நிக்கேரு?”

தெரியாம செய்திட்டான்யா.. பெரிய மனசு பண்ணி........”

“என்னவே தெரியாம? கலியாணம் கழிச்சு வச்சா, அடுத்த வருசம் ஒம்மைத் தாத்தா ஆக்கீருவான். பிள்ளைகளை ஒழுங்கா வளக்கணும்வே. இது சந்தை கெடையாது, பள்ளிக்கூடமாக்கும். பள்ளிக்கூடம்ணா கோயிலு மாதிரிவே... நீரு பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கேரா? பள்ளிக்கூடத்துக்கெல்லாம் போயிருந்தா என்னத்துக்கு சந்தையிலே செமடு தூக்கேரு?”

“ஐயா, நீங்க சொல்லுகது எல்லாம் சரி தான். தப்புத்தான். கால்லே விழுந்து மன்னிப்புக் கேக்கேன். நேத்தே வீட்டிலே நல்ல வெள்ளாவி வச்சேன். இனிமே செய்ய மாட்டான். இந்த முறை விட்டிருங்கோ........”

“என்னவே ரெம்ப லேசா சொல்லீட்டீரு!”

“பின்னே என்ன செய்ய சொல்லுகியோ? பையனை வெசம் வச்சுக் கொண்ணு போட்டிரட்டா... தப்புத்தான். பள்ளிக்கூடத்திலே செய்யக் கூடிய காரியம் இல்லேதான். ஆன உலகத்திலே அதைச் செய்யாத ஆம்பிளை உண்டாய்யா? பள்ளிக்கூடத்திலே செய்திட்டான். சவம் சின்னப் பயக்கோ புத்தியில்லே... கொழுப்பு... தப்பாகிப்போச்சு. அந்தால காதும் காதும் வச்சாப்பிலே கூப்பிட்டுக் கண்டிசு புத்தி சொல்லி அனுப்புவேளா? அதை விட்டுப் போட்டு பள்ளிக்கூடம் பூரா நாற அடிச்சி, ஊரெல்லாம் கேவலபடுத்தி, புள்ளைகளைத் தண்டிக்கலாம்யா! அவமானப் படுத்தலாமா? இனி இந்த பயக்கோ மத்த பிள்ளையொ முகத்திலே, வாத்தியமாரு முகத்திலே எப்பிடி முழிக்கும்? உமக்கு ஆம்பிளைப்பிள்ளை இருக்காய்யா? உம்ம மகன் இந்த வேலைய செய்யச்சிலே நீரு பாத்துட்டா என் செய்வேரு? போலீஸ்டேஷன்லே போயி பராதி கொடுப்பேரா? முச்சந்தியிலே தட்டி எழுதி வைப்பேரா? உம்ம மாதிரி ஆளுக்கிட்டே படிச்சா பிள்ளையோ இப்படித்தான்யா நடக்கும்! இதைவிட சுமடு தூக்கியோ செங்கல் சுமந்தோ பொழைக்கலாம்.... வாலே மக்கா போகலாம்.... பள்ளிக்கூடம் நடத்துகானுகோ பள்ளிக்கூடம்... இதுக்கு கசாப்புக் கடை நடத்தலாம்.... நாறத்தேவடியா .... மவனுகோ....”
எப்படியும் கைகலப்பு ஏற்படும் என ஓடி உதவிக்குப் போகும் தயார் நிலையில் நின்ற வாயிலோனுக்கு ஏமாற்றமாக இருந்த்து.


நாஞ்சில்நாடன், இந்தியா டுடே, ஏப்ரல் 2000

No comments:

Post a Comment